தர்மபுரி அருகே தைல மில்லுக்கு தீ வைப்பு லட்சக்கணக்கில் சேதம்

தர்மபுரி, மார்ச் 1:தர்மபுரி அருகே தைல மில்லுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவர், தைல மில் நடத்தி வருகிறார். இவரது மனைவி அம்சவேணி(50). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த  25ம் தேதி அம்சவேணி, தனது பேரன் அரவிந்துடன் வீட்டில் உறங்கி  கொண்டிருந்தார். அப்போது, இரவு நாய் வெகுநேரமாக குரைத்து கொண்டிருந்த சத்தம் கேட்டு, அம்சவேணி வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேர், அவர்கள் வீட்டின் அருகே நடத்தி வரும் தைல மில்லிற்கு தீ வைத்து விட்டு தப்பியோடினர். இதை பார்த்த அம்சவேணி சத்தமிட்டதும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மளமளவென பிடித்து பாய்லர் கொட்டகை, மஞ்சள் சோகை, தைல ஆயில்  உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அம்சவேணி அளித்த புகாரின் பேரில், கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ வைத்து விட்டு தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>