×

நாகையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தர்ணா போராட்டம்

நாகை, மார்ச்1: மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நாகை அபிராமி அம்மன் சன்னதி திடல் முன் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் அல்ஆதில் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் சல்மான் கோரிக்கைகள் குறித்து பேசுகையில், தமிழகத்தில் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பிறப்பு சான்றிதழ் வைத்திருக்க மாட்டார்கள். இவர்கள் அனைவரும் இந்த சட்டத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தும் தமிழக அரசு அமைதி காப்பது வேதனையளிக்கிறது. மேற்கு வங்கம், பஞ்சாப், பீகார், தெலுங்கானா, பாண்டிச்சேரி, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ,உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அம்மாநில மக்களின் உரிமையை மாநில அரசு பாதுகாத்தது போல தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

காத்திருப்பு போராட்டம்: நாகூர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் நாகூர் சியா மரைக்காயர் தெருவில் நேற்று முன்தினம் இரவு திடீரென காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கீழ்வேளூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழ்வேளூர், கூத்தூர், ஆழியூர், நிலப்பாடி கிளைகள் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள என்பிஆர், என்ஆர்சி, சிஏஏ, சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி தர்ணா போராட்டம் கீழ்வேளூரில் நேற்று நடைபெற்றது. கிளைத் தலைவர் முஸ்தபா கமால் தலைமை வகித்தார். ஆழியூர் கிளை தலைவர் அன்வர்அலி முன்னிலை வகித்தார். நீலப்பாடி கிளைத் தலைவர் அன்னாசாரி வரவேற்றார். தர்ணா போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் முகமதுதாஹா நன்றி கூறினார்.

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு சின்ன பள்ளிவாசல் தெருவில், நாகை வடக்கு மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. சீனிவாசபுரம் பள்ளிவாசல் சபீருதீன் தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டனர். 5ம் நாளாக இப்போராட்டம் தொடர்கிறது. கொள்ளிடம்: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் நடந்த தர்ணா போரட்டத்தில் தைக்கால், புத்தூர், அரசூர், எருக்கூர், புதுப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Tarna ,Nagaland ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...