×

ஆம்ஆத்மி அமைச்சர் வீட்டில் ஈடி சோதனை; மோடியின் மிரட்டலுக்கு பஞ்சாப் அடிபணியாது: முதல்வர் பகவந்த் மான் ஆவேசம்

சண்டிகர்: பஞ்சாப் மாநில அமைச்சர் சஞ்சீவ் அரோரா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை முதல்வர் பகவந்த் மான் கடுமையாக விமர்சித்துள்ளார். பஞ்சாப் மாநில ஆம்ஆத்மி கட்சி அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான சஞ்சீவ் அரோராவுக்குச் சொந்தமான இடங்களில், அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் கடந்த மாதமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சஞ்சீவ் அரோரா, அவரது மகன் காவ்யா அரோரா மற்றும் இரு வர்த்தக கூட்டாளிகளுக்குச் சொந்தமான அரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் உள்ள இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

கடந்த 1 ஆண்டில் மட்டும் அமைச்சரின் வீட்டில் 3 முறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனையைத் தொடங்கியுள்ளனர். கடந்த 30 நாட்களில் நடக்கும் 2வது சோதனை இதுவாகும். தொடர்ச்சியாக நடத்தப்படும் இந்தச் சோதனைகளில் இதுவரை எந்தவிதமான ஆதாரங்களும் அல்லது பொருட்களும் சிக்கவில்லை என பஞ்சாப் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைகள் குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், ‘பாஜக தனது அரசியல் லாபத்திற்காக அமலாக்கத்துறையைத் தவறாகப் பயன்படுத்துகிறது. பஞ்சாப் என்பது குருக்கள் வாழ்ந்த மண், அவுரங்கசீப்பால் கூட இந்த மண்ணை அடிபணிய வைக்க முடியவில்லை.

ஆங்கிலேயர்களுக்கு முன் பணியாத பகத் சிங்கின் வாரிசுகள் நாங்கள். எனவே, பிரதமர் மோடியின் மிரட்டல் வியூகங்களுக்கு பஞ்சாப் ஒருபோதும் அடிபணியாது. பாஜக மற்றும் அமலாக்கத்துறையின் இந்த நெறிமுறையற்ற கூட்டணிக்கு பஞ்சாபில் இருந்தே முடிவுரை எழுதப்படும்’ என்று கொந்தளித்தார். இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங், அமலாக்கத்துறையை பாஜகவின் கூலிப்படை என்று விமர்சித்துள்ளார். இந்தச் சோதனைகள் மூலம் பஞ்சாப் அரசின் மக்கள் பணிகளை முடக்க பிரதமர் மோடி முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : AMADMI MINISTER ,PUNJAB ,Chandigarh ,Bhagwant Mann ,State Minister ,Sanjeev Arora ,Punjab State Amaatmi Party ,Minister ,M. L. A. ,Sanjeev Aurora ,
× RELATED விஜய் பதவியேற்பு விழாவில் தொடரும்...