×

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா கொடியேற்றம் தெலங்கானா கவர்னர் பங்கேற்பு

குளச்சல், மார்ச் 1:  குமரியில்  பிரசித்தி பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள  பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாசிக்கொடை விழா 10 நாள்  பல்வேறு நிகழ்ச்சிகளுடன்  வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த  வருடத்திற்கான மாசிக்கொடை விழா கொடியேற்றம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  காலை நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30  மணிக்கு உஷபூஜை, சிறப்பு செண்டை மேளம் நடந்தது. 7.45 மணிக்கு  திருக்கொடியேற்றப்பட்டது. இதில் தெலங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தர்ராஜன்,  கலெக்டர் அரவிந்த், எஸ்.பி.பத்ரி நாராயணன், பத்மநாபபுரம் சப் - கலெக்டர்  சிவகுரு பிரபாகரன், குளச்சல் ஏ.எஸ்.பி.விஸ்வேஸ் பி.சாஸ்திரி, விஜயகுமார்  எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், பா.ஜ.தேசிய செயற்குழு உறுப்பினர்  எம்.ஆர்.காந்தி, மாவட்ட தலைவர்  தர்மராஜ், துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ்,  கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் எஸ்.ஏ.அசோகன், அறங்காவல் குழு தலைவர்  சிவ குற்றாலம், வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா உள்பட திரளான பக்தர்கள்  பங்கேற்றனர். தொடர்ந்து மாநாடு திடலில் இந்து சேவா சங்கத்தின்  84 வது சமய மாநாடு கொடியை தலைவர் கந்தப்பன் ஏற்றினார். தெலங்கானா கவர்னர்  தமிழிசை சவுந்தர்ராஜன் குத்து விளக்கேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார்.  மதியம் கருமங்கூடல் தொழிலதிபர் கே.எஸ்.வி.கல்யாணசுந்தரம் இல்லத்திலிருந்து  அம்மனுக்கு சீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சி, 1 மணிக்கு உச்சிகால பூஜையும்  நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 7 மணிக்கு திருவிளக்கு,  இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடந்தது.

கேரள பக்தர்கள் வருகை குறைவு
கொரோனா  பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 11 மாதங்களுக்கு மேலாக கேரள  மாநிலத்திலிருந்து  குமரி மாவட்டத்திற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.ஒரு சில  பக்தர்கள் தங்கள் வாகனங்களில் மண்டைக்காடு வந்தனர்.கேரள பக்தர்களின் வருகை  குறைவாக இருந்ததால் பொங்கலிடும் பகுதியில் கூட்டம் குறைவாக  காணப்பட்டது.கேரள பக்தர்கள் ஆண்டுதோறும் திருக்கொடியேறுவதற்கு முன்பே  மண்டைக்காடு வந்து பொங்கலிட்டு செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. தீயணைப்புத்துறை சார்பில் 2 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.கடலில் கால் நனைக்க செல்லும் பக்தர்களை கண்காணிக்க நீச்சல் பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர்கள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Tags : Mandaikadu Bhagavathyamman Temple Mass Donation Ceremony Flag ,Governor of Telangana ,
× RELATED தெலங்கானா பொறுப்பு ஆளுநராக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்