×

தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டதில், எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. அக்கட்சிக்கு 108 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கிடைத்தது. விஜய் 2 தொகுதியில் வெற்றி பெற்றதால், ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் அக்கட்சியின் பலம் 107 ஆக உள்ளது. திமுக கூட்டணி 75 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அக்கட்சியின் பலம் 112ஆக உயர்ந்தது.

தனிபெரும் கட்சியாக தவெக வெற்றிபெற்ற போதிலும் ஆட்சியமைக்க முடியாமல் திணறிவருகிறது. இப்போதைய சூழலில் தவெக ஆட்சி அமைப்பதற்குச் சில கட்சிகளின் ஆதரவு தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், தவெக தரப்பு திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளது. ஐயூஎம்எல் தலைமை தவெகவின் அழைப்பை நிராகரித்துவிட்டது. அதனால், தவெக தரப்பு இடதுசாரிகள் மற்றும் விசிகவின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஐயுஎம்எல்லிடம் ஆதரவு கேட்டதற்கு காரணம், திமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும். அதேநேரத்தில், 118 எம்எல்ஏக்கள் கிடைத்தாலும், அதில் ஒன்றிரண்டு பேர் மாற்றி வாக்களித்தால் ஆட்சி கவிழ்ந்து விடும்.

இதனால் முன்னெச்சரிக்கையாக ஐயுஎம்எல்லின் 2 எம்எல்ஏக்களின் ஆதரவை தவெக கேட்டுள்ளது. இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் 13 பேர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தவெக ஆதரவு கேட்டது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் சூளைமேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்திலும் தவெக ஆதரவு கேட்டது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்துள்ளது. ஆட்சியில் பங்கேற்காமல் வெளியில் இருந்து ஆதரவு அளிக்க இந்திய கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது. 2 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள இந்திய கம்யூ. ஆதரவு தந்துள்ளதால் தவெக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 114ஆக உயர்ந்துள்ளது.

Tags : Indian Communist ,Tamil Nadu Victory Club ,Chennai ,Indian Communist Party ,Tamil Nadu ,Tameka ,Akchi ,Vijay 2 ,
× RELATED தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று...