×

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தலுக்காக 28 பறக்கும் படை அமைப்பு கலெக்டர் தகவல்

சாயல்குடி, மார்ச் 1: சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைபடுத்துதல் தொடர்பான கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். எஸ்.பி கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி முன்னிலை வகித்தனர்.அப்போது செய்தியாளர்களிடம் கலெக்டர் கூறும்போது, ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் சுருக்க திருத்தம் 2021 அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 21ம் தேதி வெளியிடப்பட்டது. 5 லட்சத்து 76 ஆயிரத்து 343 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 81 ஆயிரத்து 132 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 11 லட்சத்து 57 ஆயிரத்து 540 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 276 வாக்கு செலுத்தும் இயந்திரங்கள், 2 ஆயிரத்து 160 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2 ஆயிரத்து 302 வாக்காளர் சரிபார்க்க கூடிய காகித தணிக்கை இயந்திரங்கள் தயாராக உள்ளன.

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையின்படி 1,369 வாக்குச்சாவடி மையங்கள், 1,647 வாக்குச்சாவடி மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும்படை டீம், தலா 3 நிலைக்கதக்க கண்காணிப்புக்குழு, தலா ஒரு வீடியோ கண்காணிப்பு குழு என மொத்தம் 28 டீம் அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு குழுவிற்கும் துணை தாசில்தார், பி.டி.ஓ நிலை அலுவலர், ஒரு எஸ்.ஐ என 6 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு குழுவிற்கு 8 மணி நேரம் பணி வழங்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள், குறைகளை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தெரிவிக்கலாம்.
மேலும் தேர்தல் தொடர்பான புகார்கள், போட்டோ, வீடியோ ஆதாரங்களை e VIGIL என்ற செயலியை டவுன்லோடு செய்து அதன் மூ.லம் அனுப்பலாம். புகார் குறித்து அளிக்கும் தகவல் ரகசியமாக வைப்பதுடன், புகார் நிலை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும்.மேலும் அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் படங்கள் அகற்ற, பொதுஇடங்களில் செய்யப்பட்ட விளம்பரங்கள், சுவரொட்டிகள், கட்சி கொடிகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு திட்டப்பணிக்கு புதியதாக டெண்டர் கோருதல், நிர்வாக அனுமதி வழங்குதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags : Flying Squadron ,Ramanathapuram District ,
× RELATED தொடர் மழையின்றி எள் விவசாயம் பாதிப்பு