பக்தர்களை ஏமாற்றும் போலி கைடுகளைப் பிடிக்க பழநியில் போலீஸ் தீவிரம்

பழநி, மார்ச் 1: கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழநி வரும் பக்தர்களுக்கு தரிசன வசதி செய்து தருவதற்காக கோயில் நிர்வாகத்தால் கைடுகள் யாரும் நியமிக்கப்படவில்லை. மாறாக, பஸ் நிலையம், தண்டபாணி நிலையம், கோயில் தலைமை அலுவலகம், மலைக்கோயில் உள்ளிட்ட இடங்களில் கணிணி வசதியுடன் கூடிய தகவல் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பூஜை நேரங்கள், தரிசன டிக்கெட் விபரங்கள், ரோப்கார் மற்றும் வின்ச் கட்டண விபரங்கள், தங்குமிட தகவல்கள், அருகில் உள்ள மற்ற கோயில்களின் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், பழநி நகரில் பலர் தங்களை கைடுகள் என்று கூறிக்கொண்டு வரும் பக்தர்களிடம் பணம் பறித்து வருகின்றனர்.

பஸ் நிலையம் துவங்கி அடிவாரம் வரை இவ்வகையான போலி கைடுகளின் அராஜகம் அதிகளவில் பெருகியுள்ளது. பஸ்நிலையத்திலேயே பக்தர்களை மடக்கி விடும் இவர்கள், செருப்பிற்கு டோக்கன் போடுவதில் துவங்கி பூஜை பொருட்கள் வாங்குவது, தரிசனத்திற்கு அழைத்துச் செல்வது வரை பல்வேறு வகைகளில் ஏமாற்றி ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.2 ஆயிரம் வரை பிடுங்கி விடுகின்றனர். இதுகுறித்து பழநி போலீசாரிடம் கேட்டபோது, ``போலி கைடுகளின் நடவடிக்கைகளை தடுக்க பஸ்நிலையத்தில் இருந்து அடிவாரம் வரை ரோந்துப்பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. சீருடை போலீசார் மட்டுமின்றி மப்டி போலீசார் மூலமும் கண்காணிப்பு பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. போலி கைடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போலி கைடுகள் குறித்து பக்தர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று கூறினர்.

Related Stories:

>