×

ராசிபுரம் நகரில் மீண்டும் தலை தூக்கியது போக்குவரத்து நெரிசல்

ராசிபுரம், மார்ச் 1: ராசிபுரம் மாநில அளவில் அதிக கல்வி நிலையங்களை கொண்ட ஊராக திகழ்கிறது. இதனால், ராசிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். கொரோனா பெருந்தொற்றால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால், ஓரளவுக்கு போக்குவரத்து குறைந்த நிலையில், தளர்வுகளுக்கு பிறகு நகரில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ராசிபுரத்தில் குறுகலான சாலைகளால், எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்படும். கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு, தற்போது பொது போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியுள்ளதால், வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. ராசிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் விசைத்தறி, விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மேலும், ராசிபுரம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு வெளியூர்களில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் பெரும்பாலான அரசு, தனியார் பஸ்கள், லாரிகள், கனரக வாகனங்கள் ராசிபுரம்  வழியாகவே இயக்கப்படுகின்றன. இதனால் ராசிபுரம்  நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

நகரின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, பஜார் வீதி, ஆத்தூர் மெயின்ரோடு, நாமக்கல் சாலைகளில் பல்வேறு வியாபார நிறுவனங்கள், மருத்துவமனைகள் நிறைந்துள்ளன. வாகனங்கள் நிறுத்த இடமில்லாததால், டூவீலர்களை ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர். மேலும், ஆட்டோக்கள் மற்றும் லோடு வாகனங்கள் ஆகியவற்றையும், லாரிகளையும் சாலை ஓரங்களிலேயே நிறுத்தி பாரங்களை இறக்கி- ஏற்றுவதால், அந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே உள்ளது. இதனால், வாகன நெரிசல் தவிர்க்க முடியாததாகியுள்ளது. வழக்கமாக நாமக்கல் மற்றும் சேலம் போன்ற இடங்களில் இருந்து வரும் வாகனங்கள், பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிவானந்தா சாலை, பெரியசாமி கடை, டிவிஎஸ் சாலை வழியாக பேருந்து நிலையம் செல்லும். ஒருவழி பாதையான இதனை தவிர்த்து, தற்போது கச்சேரி வீதி, ஆத்தூர் சாலை வழியாக வாகனங்கள் சென்று வருவதால், இரு வழிகளில் நெரிசல் அதிகரித்துள்ளது. இது போன்ற நெரிசலை தவிர்க்க சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றுவதுடன், இருபுறங்களிலும் சாலையோரம் நிறுத்தப்படும் டூவீலர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வழி பாதை வழியாக வாகன போக்குவரத்தை திருப்பி விட வேண்டும்.இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து