×

முக்கிய நிர்வாகிகள் விஜய்யுடன் சந்திப்பு; தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்: மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து புதிய கூட்டணியை அறிவித்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், மேலிட பொறுப்பாளர்கள் நிவேதித் ஆல்வா, சூரஜ் ஹெக்டே மற்றும் எம்எல்ஏக்கள் பெ.விஸ்வநாதன், தாரகை கத்பட், பிரவீன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று பனையூர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்தனர்.

அப்போது, கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், விஜய்க்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு விஜய் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், மூத்த தலைவர் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின் போது, தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரின் ஆதரவு கடிதத்தையும் விஜய்யிடம் வழங்கினர்.

இந்த சந்திப்புக்கு பின்பு கிரிஷ் சோடங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கள் தலையின் ஆலோசனையின் பேரில், தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளோம். இதற்கான கடிதத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். எங்களை போல மேலும் சில கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு வழங்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாடு மக்கள் நலனுக்கு இது மிகவும் அவசியமாகிறது. கடிதம் கொடுத்தவுடன் ராகுல் காந்தியிடம் தெரிவித்தோம். அவர் மகிழ்ச்சியடைந்துள்ளார். தவெகவுக்கு நாங்கள் வெளியில் இருந்து மட்டும் ஆதரவளிக்கவில்லை.

புதிதாக பொறுப்பேற்கவுள்ள தவெக அரசில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும். ஆட்சியில் நாங்களும் பொறுப்பெடுத்து மக்கள் நலனுக்காக செயல்படுவோம். முதல்வராக பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டணி அறிவிப்பால், 60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : VIJAY ,DAVEKA REGIME ,KRISH SODANKAR ,Chennai ,Tamil Nadu ,Congress ,Election Officer ,President ,RichwaPrudhaga ,Assembly Congress ,Rajesh Kumama ,Senior ,Officer ,Nivedit Alva ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...