×

மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை அவசியம் தொடர வேண்டும்: மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் பெ.சண்முகம் பேட்டி

 

சென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர்கிறோம், மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை எதிர்காலத்திலும் அவசியம், நீண்ட காலத்திற்கு தேவை தொடர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று அவரது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பத்மநாதபுரம், சிபிஎம் உறுப்பினர்கள் செல்லசுவாமி, கீழ்வேளூர் லதா ஆகியோர் வாழ்த்துப் பெற்றனர். அதைத் தொடர்ந்து பெ.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறுதி பெரும்பான்மை பெறும் என்ற முறையில் தேர்தலை எதிர்கொண்டோம். அதிமுக, பாஜ கூட்டணியை தோற்கடிப்பது என்ற நோக்கத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம். பாஜக தமிழக மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. புதிய ஆட்சியை பொருத்தவரை தவெக தான் முடிவெடுக்க வேண்டும்.

தவெக குறித்து இதுவரை எந்த விவாதமும் நடத்தவில்லை. பத்திரிகைகள் நிறைய செய்திகளை அவரவர் கற்பனையாக எழுதிக் கொண்டிருக்கின்றனர். கட்சி எந்த முடிவெடுத்தாலும் அதை முறையாக தெரிவிப்போம். தற்போது வரும் செய்திகள் அனைத்துமே அந்தந்த ஊடகங்கள் அவரவர்களுக்கு வாய்ப்பாக, சாதகமாக எது வேண்டுமோ அதை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை. மேலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர்கிறோம், மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை எதிர்காலத்திலும் அவசியம். நீண்ட காலத்திற்கு தேவை, தொடர வேண்டும். ஒன்றிய பாஜக ஆட்சி தொடரும் நிலையில், மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை அசியம். அதை காப்பதில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கிறது.
இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.

 

Tags : P. Shanmugam ,M.K. Stalin ,Chennai ,Secular Progressive Alliance ,state secretary ,Marxist Communist Party ,DMK ,
× RELATED நன்றி கெட்ட காங்கிரஸ்; ஆர்.எஸ்.பாரதி ஆவேச பேட்டி