கவுஹாத்தி: அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வந்தது. இங்கு மொத்தமுள்ள 126 பேரவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 102 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வௌியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அசாம் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வௌியானதை தொடர்ந்து, புதிய அரசு அமைவதற்கு ஏதுவாக ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் பிற அமைச்சர்கள் ஆளுநர் லஷ்மணாச்சார்யாவை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை இன்று(நேற்று) அளித்தனர். அவர்களின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்று கொண்டார்.
அதேசமயம் புதிய அரசு அமையும் வரை சர்மாவை தற்காலிக முதல்வராக தொடர ஆளுநர் கேட்டு கொண்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகைக்கு வௌியே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “மே 11ம் தேதிக்கு பிறகு அசாம் முதல்வர் பதவி ஏற்பு விழா நடைபெறும். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என்பதால், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம்” என்றார். முதல்வர் பதவி தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹிமந்த பிஸ்வா சர்மா, “பாஜ 2 பார்வையாளர்களை நியமித்துள்ளது. அவர்களின் முன்னிலையில் நடைபெறும் பாஜ சட்டப்பேரவை கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் அசாமின் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார்” என்றார்.
