×

தாயுடன் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர்

தேனி பஸ் நிலையத்துக்கு அருகில் மதுரையிலிருந்து 75 கி.மீ தூரத்தில் இருக்கும் தேனீ பெத்தாட்சி விநாயகர் கோயிலில் காணப்படும் ஒரு விசேஷமான சிறப்பம்சம் என்னவென்றால், இங்குள்ள ஆஞ்சநேயர் அவரது தாயாரான அஞ்சனா தேவியுடன் காட்சியளிப்பதுதான்.

குழந்தையைக் கொடுத்து வாங்கும் கோயில்

திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்திலுள்ள பொள்ளாப்பிள்ளையார் சந்நதியில் நடைபெறும் ஒரு விசேஷமான அதிசயமிது! குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து இந்த விநாயகரை வேண்டிக் கொண்டு விரதமிருந்து, குழந்தைப் பிறந்தவுடன் இச்சந்நதிக்குக் குழந்தையுடன் வந்து, இங்குள்ள ஜன்னல் போன்று அமைந்திருக்கும் பகுதியில் குழந்தையை உட்புறம் தந்து வெளிப்புறமாக வாங்குகிறார்கள். வேறு எந்த சந்நதியிலும் இல்லாத அதிசயமிது!

சிவலிங்க வடிவில் பெருமாள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை ரங்கநாதப்பெருமாள் கோயிலில் உள்ள ரங்கநாதரின் உருவம் சிவலிங்க வடிவில் இருக்கிறது!

முருகனின் வாகனம் யானை!

பொதுவாக முருகன் கோயில்களில் முருகன் சந்நதிக்கு முன்பாக மயில் வாகனம்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சிவகங்கை மாவட்டம் பிரான்மலையிலுள்ள முருகன் ஆலயத்தில் முருகனுக்கு முன்னால் யானை வாகனம் அமைக்கப்பட்டுள்ளது! சுவாமிமலை ஆலய சந்நதியிலும் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது!

ஆயுதம் தாங்கிய கருடன்!

திருநெல்வேயிலிருந்து 9 கி.மீ. தொலைவில் காணப்படும் தென் திருப்பதி என்று அழைக்கப்படும், திருவேங்கடநாதபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் ஆலயத்திலுள்ள கருடன் ஆயுதம் தாங்கிய நிலையில் காணப்படுகிறார். இரண்டு மடித்த இறக்கைகளுடன் காணப்படுவதில்லை.

பூட்டிய கதவுக்குப் பின்னால் அம்மன்!

தேனியிலிருந்து திண்டுக்கல் செல்லும் பாதையில் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பெரியகுளம். இங்குள்ள மூங்கிலணைகாமாட்சி அம்மன் ஆலய கருவறையில் உள்ள அம்மன் பூட்டிய கதவுக்குப் பின்னால் இருந்து காட்சி தருகிறாள். இதுதான் இப்போது நடைமுறையில் இருந்து வருவதாகக் கேள்வி!

அது தெரிந்தால் இது தெரியாது

இராமாயணத்தில் வாலியும், சுக்ரீவனும் சண்டையிடும் போது, ராமன் மரத்திற்குப் பின்னால் மறைந்திருந்து அம்பெய்து வாலியைக் கொன்ற நிகழ்ச்சியை புராணங்களில் படித்திருக்கிறோம். அல்லவா? அந்தக் காட்சியை அதே நோக்கில் அபூர்வமான முறையில் மிக நேர்த்தியாக சிலை வடிவில் செதுக்கப்பட்டிருக்கிறது. கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் என்னும் திருத்தலத்தில்! இந்த ஆலயத்திலுள்ள தூண்களில் காணப்படும் சிற்பங்களுள் வாலியும், சுக்ரீவனும் போரிடும் காட்சி செதுக்கப்பட்டிருக்கும். காட்சியை சிற்பத் தூணில் இருந்து பார்த்தால், ராமன் மறைந்திருக்கும் சிற்பம் உள்ள தூண் தெரியாது. அதே போல் ராமன் மறைந்து நின்று அம்புத் தொடுக்கும் சிற்பம் உள்ள தூணிலிருந்துப் பார்த்தால் வாலி, சுக்ரீவன் போரிடும் தூண் மட்டும் தான் தெரியும். எந்த ஆலயத்திலும் இல்லாத அபூர்வமான காட்சி இது!

சங்கு வடிவில் கோயில்!

தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற 14 சிவத் தலங்களுள் ஒன்றான குற்றாலத்திலுள்ள திருக்குற்றாலநாதர் கோயிலிலுள்ள சித்திரசபை, சிவன் நடனமாடிய இடமாகும். பெரும்பாலும் எல்லாக் கோயில்களும் சதுரவடிவிலோ அல்லது செவ்வக வடிவிலோதான் இருக்கும். ஆனால், இந்தக் கோயில் மட்டும் சங்குவடிவில் காணப்படுவது முக்கியச் சிறப்பாகும்.

தியான நிலையில் இருக்கும் முருகன்

திருச்செந்தூரிலுள்ள முருகன் தியான நிலையில் காணப்படுகிறார். வேறு எந்த ஆலயத்திலும் முருகப் பெருமான் இப்படி காட்சி தருவதில்லை.

உண்ணாவிரதமிருக்கும் உமையவள்!

பொதுவாக இந்த உலகில் மக்கள், தான் நன்றாக இருக்க வேண்டும். தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் விரதம் இருக்க விரும்புவார்கள். ஆனால், உலக நன்மைக்காக தெய்வமே விரதம் இருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த தெய்வம் வேறு எதுவுமில்லை, திருச்சி சமயபுரம் மாரியம்மன்தான் அந்த தெய்வம்! அன்னையவள் உலக மக்களின் நன்மையின் பொருட்டு, பங்குனி மாதம் கடைசியில் இருந்து தமிழ்ப்புத்தாண்டு (ஏப்ரல்) வரை உண்ணாவிரதம் இருக்கிறாள். இந்த 28 நாட்களுக்கும் இத்தெய்வமவளுக்கு சமைத்த உணவு, எதுவும் படைக்கப்படுவதில்லை. இளநீரும், மோரும் மட்டும்தான்!

வீணை இல்லாத சரஸ்வதி

பொதுவாக சரஸ்வதிதேவி என்றால் ஆலயங்களில் கையில் வீணை ஏந்திய கோலத்தில் தான் காட்சி தருவாள். ஆனால் தஞ்சை மாவட்டம் நாகப்பட்டினத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில் இருக்கும் வேதாரண்யம் கோயிலிலுள்ள சரஸ்வதியின் கையில் வீணை கிடையாது. சுவடி மட்டும் உண்டு. ‘‘யாழைப்பழித்த மொழியாள்’’ என்னும் பெயரைக் கொண்ட இந்த சரஸ்வதி தேவியின் குரல் வீணை இசையை விட மிகவும் இனிமையாக இருப்பதால் இவள் கையில் வீணை இன்றி தவக்கோலத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

நாக வடிவில் நவகிரகங்கள்

மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள பேரளத்தில் இருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை சமேத மேகநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள நவகிரகங்கள் எல்லாம் நாகவடிவிலேயே அமைந்திருப்பது ஒரு அபூர்வமான விஷயம்!

நவகிரகங்கள் அமர்ந்த நிலை

மதுரையிலிருந்து 37 கி.மீ.தூரத்திலுள்ள நத்தம் கைலாசநாதர் கோயிலில் உள்ள நவகிரகங்கள் யாவும் நின்ற நிலையில் அல்லாமல், அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தலத்தை செவ்வாய்தோஷ நிவர்த்தி கோயில் என்கின்றனர்.

வேடனாக வந்த வேலவன்!

நாமக்கல் மாவட்டம் அருணகிரிநாதரர் பாடல் பெற்ற திருத்தலமான பேளுக்குறிச்சி ஸ்ரீ பழனியப்பர் திருக்கோயிலில் உள்ள முருகன் வேடர் கோலத்தில் காட்சியளிப்பது தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான்!

வில்லேந்திய முருகன்

நெய்வேலிக்கு அருகிலுள்ள வில்லுடையான்பட்டி முருகன் கோயிலிலுள்ள முருகன், கையில் வில் ஏந்திய கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

தொந்தி இல்லாத கணபதி!

பொதுவாக எல்லா ஆலயங்களிலும் காணப்படும் கணபதி தொந்தி (தொப்பை) வயிற்றுடன் தான் காட்சி தருவார். ஆனால், சிதம்பரத்திற்குத் தெற்கே காட்டு மன்னார்குடி பாதையில் 20 கி.மீ. தொலைவில் இருக்கும் திருநாரையூரில் உள்ள பொள்ளாப் பிள்ளையார் அபூர்வமாக ஒட்டிய வயிற்றுடன் காட்சி தருகிறார்.

காந்திஜிக்கு ஒரு கோயில்

தேனி மாவட்டம் ‘‘காமையன் கவுண்டன்பட்டியிலும், ஈரோடு கவுந்தம்பாடிக்கு அருகே உள்ள சலங்கை பாளையத்திலும் காந்திஜிக்குக் கோயில் எழுப்பி இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே காந்திஜிக்குக் கோயில் கட்டியிருப்பது இந்த இரு இடங்களில் மட்டும்தான். கவுந்தம்பாடி காந்திஜி கோயிலில் சிறு கோபுரம், சந்நதியில் மூலவர் காந்திஜிக்கு ஒருபுறம் ஸ்ரீ மகாகணபதியும், மறுபுறம் ஸ்ரீ துர்க்கையும் காணப்படுகின்றனர். இங்கு பூஜை நடைபெறுகையில் அர்ச்சகர் ‘‘காந்தியே போற்றி…. போற்றி….’’ என்று அர்ச்சனை செய்வதும், காந்திக்கு அவ்வப்போது மஞ்சள், பால், தயிர், எலுமிச்சை, இளநீர், சந்தனம், பன்னீர் என்று அபிஷேகம் நடைபெறுவது காணப்படாத நன்று!

கானமஞ்சரி சம்பத்குமார்

 

Tags : Anjaneyer ,Theni Bus Station ,Madurai ,Bethadashi ,Vinayagar ,Anjaneyar ,Anjana Devi ,Tirunelveli ,
× RELATED உலகெங்கும் இடி மழைக்கடவுள் வழிபாடும் இந்திரன் வழிபாடும்