×

விராலிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்

விராலிமலை, பிப். 26: விராலிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்தி வழங்கியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் வைகாசி விசாகம், தை பூசம், கார்த்திகை தீபம், கந்தசஷ்டி விழா போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறும். இந்த கோயிலுக்கு தினம்தோறும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வர். இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்து புனரமைப்பு பணிக்காக கடந்த 2018ம் ஆண்டு பாலாலயம் நடந்தது. புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால் பிப்ரவரி 25ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 21ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

கடந்த 22ம் தேதி தெப்பகுளத்தில் இருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நேற்று முன்தினம் நான்காம் கால பூஜையாக கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை 6ம் காலபூஜை நடந்தது. பின்னர் நேற்று காலை 9 மணிக்கு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசங்களுக்கு புனிதநீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினர். இதைதொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் உமா மகேஸ்வரி, மத்திய மண்டல திருச்சி ஐஜி ஜெயராம், எஸ்பி பாலாஜி சரவணன், டிஆர்ஓ சரவணன், இந்து சமய அறநிலையத்துறை இணைய ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் சுரேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட வேளாண்மை குழு உறுப்பினர் மோகன், கும்பாபிஷேக ஒருங்கினைப்புக்குழு நிர்வாகி பூபாலன், விராலிமலை ஒன்றியக்குழு தலைவர் காமுமணி, தென்னலூர் பழனியப்பன், ஊராட்சி தலைவர்கள் விராலிமலை ரவி, வடுகப்பட்டி ஜெயலட்சுமிகுமார், வேலூர் ராதாசுப்பிரமணியன் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Viralimalai Murugan Temple ,Kumbabhishekam ,
× RELATED முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்