புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், விசிக, கம்யூ., தலா 1 தொகுதிகளிலும் போட்டியிட்டது. கூட்டணி கட்சியின் தர்மத்தை மீறி திமுக, விசிக போட்டியிட்ட காலாப்பட்டு, மங்கலம், உழவர்கரை, ராஜ்பவன், திருபுவனை, காரைக்கால் தெற்கு ஆகிய 6 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் களமிறங்கினர். இந்த நிலையில் அந்த வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு அளிக்கக்கூடாது என மாநில தலைவர் வைத்திலிங்கம் உத்தரவிட்டார். ஆனால், அதை கண்டுகொள்ளாத காங்கிரஸ் கட்சியினர் திமுகவுக்கு எதிராக பணியாற்றினர்.
இதனிடையே நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் சார்பில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் டெபாசிட் பறிகொடுத்தனர். அதாவது காலாப்பட்டு தொகுதியில் களமிறங்கிய ஷாஜகான்-1,990 வாக்குகளும், மங்கலத்தில் ரகுபதி-1,251, உழவர்கரையில் சிவசங்கர்-2,270, ராஜ்பவனில் குமரன்-1,538, திருபுவனையில் வேலு-3,561, காரைக்கால் தெற்கில் சக்திவேல்-1,251 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. இதனால் கட்சி உத்தரவை மீறி போட்டியிட்ட 6 பேரும் டெபாசிட் இழந்தனர். இதில் காங்கிரஸ் போட்டி வேட்பாளரால் திருபுவனை தொகுதியில் திமுக மிக குறைந்த வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இதனிடையே புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் தேஜ கூட்டணியில் போட்டியிட்ட லட்சிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சார்லஸ் மார்ட்டின், தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தேவதாசை விட 10,205 வாக்குகள் கூடுதலாக பெற்று, 16,592 வாக்குகளுடன் வெற்றிவாகை சூடியுள்ளார். அதேவேளையில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ராஜ்பவன் தொகுதி திமுக வேட்பாளர் விக்னேஷ் கண்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜ மாநில தலைவர் வி.பி.ராமலிங்கத்தைவிட 287 வாக்குகள் மட்டும் அதிகம் பெற்றார். அடுத்ததாக காலாப்பட்டில் திமுக வேட்பாளர் செந்தில் (எ) ரமேஷ் (447), இந்திராநகரில் என்ஆர்.காங். ஏகேடி.ஆறுமுகம் (584) உள்ளிட்டோரும் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தன்வசமாக்கி உள்ளனர்.
