வேலூர்: தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் ேநற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்தில் நோட்டாவை விட 45 வேட்பாளர்கள் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம்(தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட 65 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் வேலூர் தொகுதியில் நோட்டாவுக்கு 757 வாக்குகள் பதிவானது. 15 ேவட்பாளர்களில் 11 வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றனர்.
காட்பாடியில் நோட்டாவுக்கு 745 வாக்குகள் பதிவானது. போட்டியிட்ட 15 பேரில், 11 வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றனர். அணைக்கட்டு தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 9 வேட்பாளர்கள், 1,103 நோட்டா பெற்ற வாக்குகளை குறைவாக பெற்றனர். கே.வி.குப்பம் தொகுதியில் நோட்டாவுக்கு 972 வாக்குகள் பதிவானது. இதில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில், 7 வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றனர். குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 799 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானது. இதில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில், 7 வேட்பாளர்கள் நோட்டவை விட குறைவான வாக்குகளை பெற்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில், மொத்தம் நோட்டாவுக்கு 4,376 வாக்குகள் பதிவானது. இதில் போட்டியிட்ட 65 வேட்பாளர்களில் 45 வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
