×

யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை விஜய் கட்சி அதிக இடங்களில் வெற்றி: தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைகிறது; கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்பு: திமுக இரண்டாம் இடத்தை பிடித்தது

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் நடிகர் விஜய்யின் தவெக 107 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் தனி மெஜாரிட்டிக்கு 11 இடங்கள் கிடைக்காததால் தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைய உள்ளது. திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை தற்போது தவெகவுக்கு உருவாகியுள்ளது. இந்த தேர்தலில் திமுக 2வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 23ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டியுடன் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜ உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி என இருபெரும் அணிகளுடன், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் களம் கண்டன. இதுதவிர ராமதாஸ்- சசிகலா இணைந்து ஒரு கூட்டணியை அமைத்து போட்டியிட்டனர்.

இருப்பினும் 4 முனை போட்டி ஏற்பட்டது. இதில் முதல்வர் வேட்பாளர்களாக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியிலும் போட்டியிட்டனர். ஏப்.23ம் தேதி வாக்குப்பதிவில், மொத்தம் 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர்.

85.10% வாக்குகள் பதிவாகி இருந்தன. நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்குகள் அரை மணி நேரத்தில் எண்ணி முடிக்கப்பட்டன. இந்த தேர்தலில் மொத்தம் 4.61 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில் 2.88 லட்சம் வாக்குகள் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுடையது. 85 வயதுக்கும் மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என 1.73 லட்சம் பேர் வாக்களித்தனர், 1.10 லட்சம் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் நேரடியாக வாக்களித்துள்ளனர்.

அதை தொடர்ந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களின் பதிவான வாக்குகள் சுற்றுக்கள் அடிப்படையில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் விஜய்யின் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் பலர் முன்னிலை வகித்தனர். புது வரவான தவெக ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கியது தமிழக அரசியல் கட்சியினரை வியப்பில் ஆழ்த்தியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் பல தொகுதிகளில் திமுக, அதிமுக கட்சிகளில் உள்ள முக்கிய தலைவர் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில்தான் அதிக இடங்களை தவெக பிடித்துள்ளது. அதன்படி, வாக்கு எண்ணிக்கை முடிவில், தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்கள் பெற்று முன்னிலை வகித்தது. திமுக கூட்டணி 74 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் முன்னிலை வகித்தனர். திமுக கூட்டணியை பொறுத்தவரை திமுக 60, காங்கிரஸ் 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, தேமுதிக 2, விசிக 2, இந்திய கம்யூனிஸ்ட் 2 , மார்க்சிஸ்ட் 2 இடங்களும் பெற்றன.

அதிமுக கூட்டணியில் அதிமுக 47, பாஜ 1, பாமக 5, அமமுக 1 ஆகிய இடங்களை பெற்றனர். இந்த அடிப்படையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 2வது இடத்தை பிடித்துள்ளது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து 3வது இடத்தை பிடித்தது. இதனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழக அரசியலில் எப்போதும் திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளில் ஒன்று ஆளுங்கட்சியாகவும், மற்றொன்று பலமான எதிர்க்கட்சியாகவும் இருந்து வந்துள்ளன.

ஆனால், இன்று இரண்டு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் தவெக வந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்து போட்டியிட்ட போதும், முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவினார். அதேபோன்று, திமுக அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், சு.முத்துச்சாமி, பழனிவேல் தியாகராஜன், மதிவேந்தன், ஆர்.காந்தி, ஆர்.ராஜேந்திரன், கீதா ஜீவன், பி.மூர்த்தி, டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எம்.நாசர், மு.பெ.சாமிநாதன் என மொத்தம் 13 அமைச்சர்கள், சபாநாயகர் அப்பாவு தோல்வியை தழுவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியை சந்தித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, வளர்மதி, கோகுல இந்திரா, கடம்பூர் ராஜூ, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் என மொத்தம் 10 பேர் தோல்வியை சந்தித்துள்ளனர்.

இதில், ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டெபாசிட் இழந்தது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில் ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டிக்கு 118 இடங்கள் தேவை. ஆனால் தவெகவிடம் 107 தொகுதிகள் மட்டுமே உள்ளது. இதனால் திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே அவர்களால் ஆட்சி அமைக்கக் கூடிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தமுள்ள சட்டமன்ற தொகுதிகளில் பாதிக்கும் அதிகமான இடங்களை பிடிப்பவர்களே ஆட்சி அமைக்க முடியும் என்று அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது. இது ‘தனிப் பெரும்பான்மை’ என்று அழைக்கப்படுகிறது. ஒரு கட்சிக்கு தனிப் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை என்றால், அதை ‘தொங்கு சட்டமன்றம்’ என்று அழைப்பார்கள். அதன் அடிப்படையில், தற்போது தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 107 தொகுதிகளில் மட்டுமே தவெக வெற்றி பெற்றுள்ளதால் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு இன்னும் 11 தொகுதிகள் தேவைப்படுகிறது. மேலும் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால் ஒரு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எனவே அதிலும் ஒரு தொகுதி குறைகிறது. இதனால் திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் ஆதரவை பெற்றால் மட்டுமே ஆட்சி அமைக்கும் நிலை தவெகவுக்கு உருவாகியுள்ளது. தற்போது, தொங்கு சட்டசபை உருவாகியுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 5, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தலா 2 கட்சிகள், தேமுதிக 1 என திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இணைந்து விஜய்க்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக 4 மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை இணைத்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு பாமகவை பாஜ அனுமதிக்க வேண்டும். இவ்வளவு குழப்பம் உள்ளது. எனவே தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி அமைத்து விஜய் முதல்வராவது என்பது வாய்ப்பில்லாத ஒன்று என்றே கூறலாம். இதனால் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியும் பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவை கேட்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அமைச்சரவையை பகிர்ந்து கொள்ளும் அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் சிறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கலாம். இதன் மூலம் தமிழகத்தில் ஒரு கூட்டாட்சி அமையக்கூடும்.

எனவே இந்த கட்சிகள் எல்லாம் தவெகவுக்கு ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேநேரத்தில் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கவர்னரை சந்தித்து முறையிட தவெக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழக தேர்தல் முடிவுகள் ஒரு குழப்பமான சூழ்நிலையை தற்போது ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Vijay party ,Tamil Nadu ,Dimuka ,Chennai ,Vijayin Daweka ,Tamil Nadu Legislative Assembly elections ,Adimuka ,
× RELATED பீனிக்ஸ் பறவை போல அதிமுக வெற்றிப்...