×

கப்பல்களை மீட்க ‘பிராஜெக்ட் பிரீடம்’ திட்டம்: ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; டிரம்பின் புதிய அறிவிப்பால் பதற்றம் குறையுமா?

வாஷிங்டன்: ஈரான் – அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போரால் ஹார்முஸ் நீர்ச்சந்தி பகுதியில் சுமார் 20,000 மாலுமிகளும், நூற்றுக்கணக்கான சரக்குக் கப்பல்களும் நீண்ட நாட்களாகத் தவித்து வருகின்றனர். போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே பல்வேறு கட்டங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஈரான் தனது 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தது. அதில் 30 நாட்களுக்குள் நிரந்தரத் தீர்வு காண வேண்டும், பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் மற்றும் அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் போன்ற நிபந்தனைகள் இடம்பெற்றிருந்தன.

ஆரம்பத்தில் இந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் தனது செயல்களுக்கு இன்னும் சரியான விலையைச் செலுத்தவில்லை என்று விமர்சித்து வந்தார். தற்போது நிலவும் சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து டிரம்ப் வெளியிட்ட செய்தியில், ‘எனது பிரதிநிதிகள் ஈரான் நாட்டுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமாக உள்ளது. இது அனைவருக்கும் நல்ல விடியலைத் தரும்’ என்றும் பதிவிட்டுள்ளார். இதற்கிடையில், அங்கு சிக்கியுள்ள கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற ‘பிராஜெக்ட் பிரீடம்’ என்ற அதிரடி திட்டத்தை அவர் தொடங்கி வைத்துள்ளார்.

இதன் மூலம் நடுநிலையான மற்றும் எந்தப் பிரச்னையிலும் சிக்காத கப்பல்களை ஹார்முஸ் நீர்ச்சந்தியிலிருந்து பத்திரமாக வெளியேற்ற அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு வழங்க உள்ளது. இந்த மனிதாபிமான நடவடிக்கையில் யாராவது குறுக்கிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், மற்றொரு பக்கம் கடல் பகுதியில் பதற்றம் குறையவில்லை. நேற்று ஈரான் அருகே சென்ற ஒரு சரக்குக் கப்பலை மர்மப் படகுகள் வழிமறித்துத் தாக்குதல் நடத்தின. இதற்கிடையில் ஈரான் புரட்சிகர ராணுவம், ஐக்கிய அரபு அமீரக எல்லைக்கு அருகில் இருக்கும் கப்பல்களை உடனடியாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.

இதனால் ஏராளமான கப்பல்கள் துபாயை நோக்கி விரைந்து வருகின்றன. ஹார்முஸ் நீர்ச்சந்தி தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அங்கு வரும் கப்பல்கள் வரி செலுத்த வேண்டும் என்றும் ஈரான் கூறி வருகிறது. அமெரிக்காவின் இந்த பாதுகாப்புத் திட்டம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளதால் அந்தப் பகுதியில் மீண்டும் மோதல் வெடிக்கும் சூழல் நிலவுகிறது. இருப்பினும், பாகிஸ்தான் வழியாகத் தங்களுக்குக் கிடைத்துள்ள அமெரிக்காவின் பதில்களை ஆய்வு செய்து வருவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

Tags : Iran ,US ,Trump ,WASHINGTON ,Strait of Hormuz ,Iran—Israel ,United ,States ,Israel ,United States ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...