×

பைக்கில் பின்னால் இருந்து மாமியாரை ஹெல்மெட்டால் தாக்கி கொன்ற மருமகன்: தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை: மாமியாரை பைக்கில் அழைத்துச்சென்று ஹெல்மெட்டால் தாக்கி கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், மேட்சல் மால்காஜ்கிரி மாவட்டம், செங்கிசெர்லா ஆர்.டி.சி. காலனியைச் சேர்ந்தவர் அருணா(39). இவரது இளைய மகள் காவ்யா(19). இவரும் கரீம்நகர் சந்தன்பூரைச் சேர்ந்த ஸ்நேஹித்(28) என்பவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த மாதம் 29ம்தேதி இரவு ஸ்நேஹித், தனது மாமியார் அருணாவிற்கு போன் செய்து, உங்கள் மகள் மீதான ஆசையால் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நான் ஒரு பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கிறேன். ஆனால் சமீப காலமாக உங்கள் மகள் சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் பெரிதாக கோபம் கொள்கிறாள். அவளுக்கு நீங்கள் அறிவுரை கூறுங்கள் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மறுநாள் மதியம் அருணா அங்குள்ள கடைக்குச் சென்றார். அப்போது ​​அங்கு பைக்கில் வந்த ஸ்நேஹித், தனது மாமியார் அருணாவிடம் காவ்யாவிடம் பேச வாருங்கள் எனக்கூறி அழைத்துச் சென்றார். அவ்வாறு அழைத்து சென்ற சிறிது நேரத்திற்கு பிறகு காவ்யாவிற்கு போன் செய்த ஸ்நேஹித், உனது அம்மாவை பைக்கில் அழைத்து சென்றபோது வலிப்பு வந்து மயங்கி கீழே விழுந்து விட்டார். அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளேன் எனக்கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவ்யா உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று பார்த்தபோது அருணா ரத்தக்காயங்களுடன் சடலமாக கிடந்தார். அப்போது ​​ஸ்நேஹித்தின் நடத்தையில் காவ்யாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து காவ்யா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அருணாவை ஸ்நேஹித் பைக்கில் அழைத்து செல்கிறார். ஓடும் பைக்கிலேயே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஸ்நேஹித், தனது ஹெல்மெட்டால் அருணாவை பலமாக தாக்கியுள்ளார். இதில் பைக்கிலிருந்து அருணா கீழே விழுந்தார். இதில் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்தார் என்பது ெதரியவந்தது.

இதையடுத்து ஸ்நேஹித்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் குற்றத்தை ஸ்நேஹித் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் ஸ்நேஹித் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஓடும் பைக்கில் மாமியாரை மருமகனே தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Telangana ,Telangana State ,Matsal Malkajgiri District ,Cengkiserla R. D. ,C. Aruna ,Kavya ,Karimnagar Chandanpur ,
× RELATED பேசின்பிரிட்ஜ் பகுதியில் 1086...