×

தெருவிளக்குகள் பழுதால் இருள்சூழ்ந்த தாம்பரம் – தர்காஸ் பிரதான சாலை: வாகன ஓட்டிகள் அவதி

தாம்பரம்: மேற்கு தாம்பரத்தில் உள்ள தாம்பரம் – தர்காஸ் பிரதான சாலை வழியாக தர்காஸ், முடிச்சூர், மண்ணிவாக்கம், வண்டலூர், மணிமங்கலம், நடுவீரப்பட்டு, சோமங்கலம், எருமையூர், குன்றத்தூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.அதுமட்டுமின்றி அவ்வழியாக கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், கல்குவாரிகள் என உள்ளதால் தினமும் ஏராளமான தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகள் சென்று வருவது வழக்கம். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இந்நிலையில் இந்த சாலையில் உள்ள தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மேல், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியாததால், அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்த சாலை இருள் சூழ்ந்து காணப்படும் சூழலை பயன்படுத்திக்கொள்ளும் சில சமூகவிரோதிகள் இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் நின்று மது அருந்துவது, மதுபோதையில் அவ்வழியாக செல்லும் பெண்களிடம் தகதமுறையில் நடப்பது, வழிப்பறியில் ஈடுபட முயற்சிப்பது உள்ளிட்ட பல சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் பெண்கள் சாலையில் நடந்து செல்வதற்கு அஞ்சுகின்றனர்.மேலும் இந்த இருளை பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் திருட்டு சம்பவங்களும் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து தாம்பரம் மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவித்தால் அவர்கள் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த சாலையில் சில நாட்களாக மின்விளக்குகள் ஏரியாததால் இதனை பயன்படுத்திக்கொள்ளும் சில சமூகவிரோதிகள் தினமும் மாலை மற்றும் இரவு நேரங்களிலும் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் தகதமுறையில் நடப்பது போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சாலையின் அருகிலேயே மலைப் பகுதி உள்ளதால் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவிட்டு சமூக விரோதிகள் மலைப்பகுதி வழியாக தப்பி சென்று விடுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மலைப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டிய வனத்துறை அதிகாரிகளும் முறையாக கண்காணிப்பு பணியில் ஈடுபடாமல் சாலை ஓரம் மலையை சுற்றி போடப்பட்டுள்ள மதில் சுவர் அருகே நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து விடுவேன் என கூறி பணம் பறிக்கும் செயல்களில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள். தவிர இதுவரை வனத்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டதாக தெரியவில்லை.மின்வாரிய அதிகாரிகளும் தொடர்ந்து மெத்தனமாகவே செயல்பட்டு வருகின்றனர்.போலீசாரும் இந்த பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். எனவே இதுபோன்ற சமூகவிரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் பழுதடைந்த மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Dargas Main Road ,Tambaram ,West Tambaram ,Dargas ,Nodachur ,Sandivakkam ,Vandalur ,Manimangalam ,Naduvirapattu ,Somangalam ,Erumiyoor ,Kunrathur ,Poonthamalli ,Sripramutur ,
× RELATED முத்துப்பேட்டை அடுத்த இடும்பவனத்தில்...