இஸ்தான்புல்: வெளிநாடுகளில் இருந்து பென்டானில், ஹெராயின், கோகைன் ஆகிய போதை பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தப்படுவதை முறியடிக்க இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு “ஆபரேஷன் குளோபல் ஹன்ட்” என்ற ரகசிய நடவடிக்கையை தொடங்கினர். இதன்படி என்சிபி, மும்பை காவல் துறை, குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை இணைந்து, இன்டர்போல் உதவியுடன் சர்வதேச போதை கும்பல்களை பிடிக்க திட்டமிட்டது.
முதல்கட்டமாக உள்நாடு, வெளிநாடுகளில் செயல்படும் 100-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் கும்பல்களை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி சலீம் டோலா துருக்கியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்ய இன்டர்போல் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. துருக்கி பாதுகாப்பு படையினரின் நீண்ட தேடலுக்கு பிறகு சலீம் டோலா அண்மையில் இஸ்தான்புல் நகரில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். கடந்த 28ம் தேதி, மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, மே 8-ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன்பேரில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு வட்டாரங்கள் கூறுகையில், ‘மும்பையின் டோங்ரி பகுதியை சேர்ந்த சலீம் டோலா, ஆரம்ப காலத்தில் மும்பை, டெல்லியில் குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்தார். பின்னர் அவருக்கு தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு ஏற்பட்டபிறகு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட தொடங்கினார். அப்போது பலமுறை போலீசிடம் பிடிபட்டார். பின்னர் வெளிநாட்டுக்கு தப்பியோடினார். இந்திய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள், டோலாவின் சர்வதேச வலையமைப்பை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து துபாயில் வசித்து வந்த டோலாவின் மகன் தாஹீர், மருமகன் முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தற்போது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சலீம் டோலா கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டார். பல்கேரியா நாட்டின் பாஸ்போர்ட்டில் ஹம்சா என்ற பெயரில் டோலா தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் இந்தியா மட்டுமன்றி சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் பிடிபடும்‘ என்றன.
