×

வாடிக்கையாளர்போல் சென்று நகைக்கடையில் வெள்ளி திருடிய தம்பதி கைது

கோவை, பிப்.26: கோவை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர். ரோட்டில் பிரபலமான நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த ஒரு ஆணும், பெண்ணும் கடை ஊழியர்களிடம் சிறிய அளவிலான வெள்ளி கிண்ணம் வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் பல்வேறு வடிவங்களில் வெள்ளி கிண்ணத்தை அவர்களிடம் காண்பித்தனர். தொடர்ந்து அவர்கள் இன்னொரு நாள் வந்து வாங்கி கொள்கிறோம் என தெரிவித்துவிட்டு சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின்னர் சோதனை செய்தபோது 20 கிராம் எடையுடைய சிறிய வெள்ளி கிண்ணம் காணாமல் போனது தெரியவந்தது.

கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது அவர்கள் திருடி சென்றது பதிவாகியிருந்தது. உடனே ஊழியர்கள் இது குறித்து கடை நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். அவர்கள் இது குறித்து சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடினர். இதனையடுத்து மாலையில் சாயிபாபா காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான இருவரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் நகைக்கடையில் வெள்ளி கிண்ணத்தை திருடிய திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ராக்காச்சிபுரத்தை சேர்ந்த தம்பதியினர் கண்ணன் (55), லட்சுமி (48) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்