×

பு.புளியம்பட்டி சந்தையில் விதை வெங்காயம் விலை குறைந்தது

சத்தியமங்கலம், பிப்.26: ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள வாரச்சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் மற்றும் நடவுக்கு தேவையான விதை வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் நேற்று புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு 800க்கும் மேற்பட்ட விதை வெங்காயம் மூட்டைகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த இரண்டு வாரங்களாக கிலோ ரூ.170 வரை விற்ற விதை வெங்காயம் நேற்று விலை குறைந்து கிலோ ரூ. 80 முதல் 90 ரூபாய் வரை விற்பனையானது.

விதை வெங்காய விலை குறைந்ததால் விவசாயிகள் அதிகளவில் விதை வெங்காயத்தை வாங்கி சென்றனர்.விதை வெங்காயத்தை வாங்க தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ்நகர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர். எதிர்பார்த்த வரத்து இல்லாததால் விதை வெங்காயம் விலை கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்த நிலையில் நேற்று வரத்து  அதிகரித்ததால் விதை வெங்காயம் விலை குறைந்துள்ளது. அதனால் விளை நிலங்களில் பயிரிட அதிகளவில் விதை வெங்காயத்தை வாங்கி செல்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Puliyampatti market ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி...