×

சின்னமனூர் அருகே வாகன போக்குவரத்திற்கு புதிய பாலம் திறப்பு

சின்னமனூர், பிப். 26: தினகரன் செய்தி எதிரொலியாக, சின்னமனூர் அருகே, மார்க்கையன்கோட்டையில் வாகன போக்குவரத்திற்காக புதிய பாலம் திறக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சின்னமனூரிலிருந்து போடிக்கு செல்லும் வழியில் மார்க்கையன்கோட்டை பேரூராட்சி உள்ளது. இங்குள்ள குச்சனூர் பிரிவு அய்யம்பட்டி சாலையில், கழிவுநீர் கடத்த புதிய பாலம் கட்டப்பட்டது. ஆனால், முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டியதால், கழிவுநீர் கடக்க வழியில்லாமல் சாலையில் தேங்கியது. இதனால், இந்த பாலத்தை இடித்துவிட்டு கழிவுநீர் செல்லும் வகையில் புதிய பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதனால், அய்யம்பட்டி, புலிகுத்தி, சிந்தலைச்சேரி, தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் ,போடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்ற அரசு, தனியார் பஸ்கள் மற்றும் லாரிகள் விவசாய வாகனங்கள், டுவலர்கள் உள்பட அனைத்தும் மார்க்கையன்கோட்டை அக்ரஹாரம் குறுகிய சாலையில் திருப்பி விடப்பட்டது. இதனால், விபத்து ஏற்பட்டு வந்தது. குறுகிய சாலையில் டூவீலரில் சென்ற ஜோசியரின் கை பஸ்சில் மோதி துண்டானது. இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை விரைவில் திறக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து நமது தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் புதிய பாலத்தை திறந்தனர். இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : New bridge ,Chinnamanur ,
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி