குன்றத்தூரில் இருந்து போரூர் செல்லும் பிரதான சாலை நடைபாதை ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் கடும் அவதி: கடைகளை அகற்ற வலியுறுத்தல்

குன்றத்தூர், பிப்.26: குன்றத்தூர் அடுத்த கோவூர் ஊராட்சி மன்றம் அருகே பிரதான சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து, ஏராளமான கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக,  பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில், சாலையில் நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குன்றத்தூரில் இருந்து போரூர் செல்லும் பிரதான சாலை போக்குவரத்துக்கு மிக முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.

இதனால், தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், பைக், கார் உள்பட பல்வேறு வாகனங்களில் இச்சாலையில் பயணிக்கின்றனர். இதையொட்டி, இந்த பிரதான சாலையில் காலை, மாலை என எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.

கடும் போக்குவரத்து ெநரிசலை கட்டுப்படுத்த குன்றத்தூர் - போரூர் சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு ெதாடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக திமுக சார்பில், குன்றத்தூர் - போரூர் சாலையை அகலப்படுத்த வேண்டும் என சட்டமன்றத்திலும் பேசப்பட்டது. பின்னர், நீண்ட போராட்டத்துக்கு பிறகு இச்சாலையை அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.

அப்போது, சாலையின் ஓரமாக பொதுமக்கள், நடந்து செல்லும் வகையில் நவீனமாக நடைபாதையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட நடைபாதையை, சாலையோர கடை உரிமையாளர்கள் சிலர் வேலி அமைத்து, கடைகள் அமைத்துவிட்டனர். மேலும், அங்கு காலை முதல் இரவு வரை வியாபாரமும் செய்து வருகின்றனர். இதனால் நடைபாதையை பயன்படுத்த

முடியாமல் பொதுமக்கள், சாலையில் இறங்கி நடக்கின்றனர்.

அந்த நேரத்தில், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மோதி, அடிக்கடி சிறு சிறு விபத்துக்களும் நடக்கின்றன.எனவே பெரிய அளவில் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படும் முன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நடைபாைதயை ஆக்கிமித்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இதில், அத்துமீறி செயல்படும் கடைக்காரர்களை, போலீசார் எச்சரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

More
>