×

நீட் தேர்வு நடைபெறும் மையங்களில் மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய AI பயன்படுத்தப்படும்: என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

 

இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நடைபெறும் மையங்களில் மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய AI பயன்படுத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அவ்வாறு மோசடி கண்டறியப்பட்டால் அனைத்து தேர்வுகளிலும் பங்கேற்பதிலிருந்து நிரந்தரமாக தடை விதிக்கப்படும். இளநிலை நீட் தேர்வு தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நிகழ்நேரப் பகுப்பாய்வுக் கருவிகளை அனைத்து தேர்வு மையங்களிலும் பயன்படுத்தப்படவுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக தேசிய அளவில் இளநிலை நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு விண்ணப்பங்கள் பிப்ரவரி 8ம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 8 வரை பெறப்பட்டன. இந்தாண்டு நாடு முழுவதும் 22,79,743 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் மாணவர்கள் 9,46,815, மாணவிகள் 13,32,928. அதன்படி, மொத்த விண்ணப்பதார்களின் 58% பேர் பெண்கள் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இத்தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மாெழிகளில் நடத்தப்படுகிறது. தேர்விற்கான ஹால் டிக்கெட் கடந்த 26ம் தேதி வெளியானது.

இளநிலை நீட் தேர்வு மே 3-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையில் நடைபெறுகிறது. 180 வினாக்கள் கேட்கப்பட்டு, 720 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகை தேர்வின் மூலம் நடைபெறும். தேர்வின் போது மாணவர்களுக்கு பயோமெட்ரிக் சரியாக வேலை செய்யாவிட்டாலும், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நாளன்று பயோமெட்ரிக் சரிபார்ப்பில் சாதனக் கோளாறுகள், இணைய இணைப்புப் பிரச்சினைகள் அல்லது பிற காரணங்களால் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், தேர்வுக் கூடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். ஒரு எளிய எழுத்துப்பூர்வ உறுதிமொழியை மட்டும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

மேலும் தேர்வு எழுத செல்பவர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் தெளிவாக கூறப்பட்டுள்ளன. தேர்வர்கள் காலை 11 மணி முதல் மதியம் 1. 30 மணிக்குள் தேர்வு அறைக்கு வர வேண்டும். சரியாக மதியம் 1.30 மணிக்கு தேர்வு மையத்தின் வாசல் கதவு மூடப்படும். அதன் பின்னர் வரும் எந்தவொரு தேர்வரும் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு முடிவடையும் வரை, எந்தவொரு தேர்வரும் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வு நாளன்று எந்தப் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் இடத்தை ஒரு நாள் முன்னதாகவே சரி பார்த்துக் கொள்ள வேண்டும். மதம், வழக்கங்களின் படி நீங்கள் குறிப்பிட்ட உடை அணிய வேண்டியிருந்தால், முழுமையான சோதனைக்காக தேர்வு மையத்திற்கு முன் கூட்டியே செல்லவும். அனுமதி அட்டை, செல்லுபடியாகும் அடையாள அட்டை மற்றும் முறையான உடல் சோதனை இல்லாமல் எந்தவொரு விண்ணப்பதாரரும் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். பரிசோதனை கருவி (HHMD) மூலம் உடல் வெப்ப சோதனை மேற்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் அட்டையின் புதுப்பிக்கப்பட்ட நகலை மையத்திற்குக் கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் மின்னணு சாதனங்கள், செல்போன் மற்றும் தகவல் குறிப்பேட்டில் (Information Bulletin) பட்டியலிடப்பட்டுள்ள பிற தடைசெய்யப்பட்ட, விலக்கப்பட்ட பொருட்கள் உட்பட, எந்தவொரு தனிப்பட்ட உடைமைகளையும் தேர்வு மையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தனிப்பட்ட உடைமைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்குத் தேர்வு அதிகாரிகள் பொறுப்பேற்க மாட்டார்கள். மேலும், தேர்வு மையத்தில் அதற்கான எந்தவித வசதியும் செய்து தரப்படாது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தேர்வு மையங்கள் சிசிடிவி (CCTV) கண்காணிப்பின் கீழும், சிக்னல் ஜாமர்கள் (Jammers) பொருத்தப்பட்ட நிலையிலும் இருப்பதால், எந்தவொரு தேர்வரும் முறையற்ற வழிகளைக் கையாளவோ அல்லது நியாயமற்ற தேர்வு நடைமுறைகளில் ஈடுபடவோ கூடாது. அவ்வாறு கண்டறியப்பட்டால், அத்தகைய தேர்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்துத் தேர்வு மையங்களிலும், தேர்வு நடைபெறும் போதும் மற்றும் தேர்வு முடிந்த பிறகும், தேர்வர்கள் முறையற்ற வழிகளைக் கையாளவோ அல்லது மோசடிச் செயல்களில் ஈடுபடவோ வாய்ப்புள்ளதா என்பதைக் கண்டறிய, தேசிய தேர்வு முகமை செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நிகழ்நேரப் பகுப்பாய்வுக் கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறது.

முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்த, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. முறைகேடு கண்டறியப்பட்டால், தேசிய தேர்வு முகமை நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் பங்கேற்பதிலிருந்து நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

 

 

Tags : National Selection Agency ,
× RELATED பாலியல் வன்கொடுமையால்...