மாவட்டம் முழுவதும் புதிதாக 331 வாக்குச்சாவடி

சிவகங்கை, பிப்.26: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 331 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வாக்குசாவடிகளை இரண்டாக பிரிப்பது தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை ஆர்டிஓ முத்துகழுவன் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசியதாவது, சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை(தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காரைக்குடி தொகுதியில் 345 வாக்குச்சாவடிகளும், திருப்பத்தூர் தொகுதியில் 334 வாக்குச்சாவடிகளும், சிவகங்கை தொகுதியில் 348 வாக்குச்சவடிகளும், மானாமதுரை தொகுதியில் 321 வாக்குச்சாவடிகளும் சேர்த்து மொத்தம் 1,348 வாக்கு சாவடிகள் இருந்தன.

தற்போது 1050க்கும் மேற்பட்ட வாக்காளர் உள்ள இடங்களில் வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் காரைக்குடி தொகுதியில் 98 வாக்குச்சாவடிகளும், திருப்பத்துர் தொகுதியில் 76 வாக்குச்சாவடிகளும், சிவகங்கை தொகுதியில் 79 வாக்குச்சாவடிகளும், மானாமதுரை தொகுதியில் 77வாக்குச்சாவடிகளும் சேர்த்து 331 வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 330 வாக்குசாவடிகள் ஏற்கனவே வாக்குசாவடி உள்ள வளாகத்திற்குள்ளேயே உள்ள கட்டிடத்தில் அமைந்துள்ளது. ஒரு வாக்குச்சாவடி மட்டும் வேறு இடத்தில் அமைந்துள்ளது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் சேர்த்து 1,679 வாக்குசாவடிகள் உள்ளன. திருப்புவனத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாணி கிராமத்தில் வாக்குச்சாவடி அமைப்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.

Related Stories:

>