×

அரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பலி: திருவள்ளூரை சேர்ந்தவர்கள்

சென்னை, பிப்.26: அரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கிய மகனும், அவரை காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கோணலம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மின்வேலியில் சிக்கி 2 பேர் இறந்து கிடப்பதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது.அதன்பேரில் டிஎஸ்பி மனோகரன், தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்ஐ பழனிசாமி மற்றும் போலீசார், வருவாய் ஆய்வாளர் முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர்கள் திருவள்ளூர் மாவட்டம் ராமலிங்காபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாக்கியராஜ் (37), அவரது மகன் 9ம் வகுப்பு மாணவன் அருண்குமார் (13) என்பது தெரியவந்தது. இவர்கள் அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் எலி தொல்லைக்காக அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி இறந்தது தெரியவந்தது. மேலும் செல்வம் என்பவரது நிலத்தை இறந்த பாக்கியராஜ் குத்தகைக்கு வாங்கி பயிர்செய்து வந்ததும், எலிகளை கட்டுப்படுத்த மின்வேலியை அவரே

அமைத்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக அதிகாலை பாக்கியராஜ் தனது மகன் அருண்குமாருடன் வந்துள்ளார். அப்போது நிலத்தின் வரப்பில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி அருண்குமார் மின்வேலி மீது விழுந்துள்ளான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாக்கியராஜ் தன் மகனை காப்பாற்ற முயன்றார். அப்போது இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளதாக தெரிகிறது’’ என்றனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Minveli ,Arakkonam ,Tiruvallur ,
× RELATED ஈரோடு அருகே விவசாய நிலத்தில்...