×

ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 சதவீத அரசு பஸ்கள் நிறுத்தம் முகூர்த்த நாளில் மக்கள் கடும் அவதி

சாயல்குடி, பிப்.26:  ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 சதவீத பஸ்கள் இயக்கப்பட வில்லை. இதனால் முகூர்த்த நாளான நேற்று பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பயன் நிலுவை தொகைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் என தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களும் அறிவித்தன. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் ஊழியர்கள் பஸ்களை பணிமனைகளில் கொண்டு வந்து நிறுத்த தொடங்கினர். நேற்று அதிகாலையில் இயக்கப்பட வேண்டிய பஸ்கள் அனைத்தும் ஊழியர்கள் வராததால் பணிமனைகளிலேயே நின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரத்தில் 2 என மாவட்டத்தில் மொத்தம் 6 பஸ் டிப்போக்கள் உள்ளன. 100க்கும் மேற்பட்ட நகர   பேருந்துகள் உட்பட 300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராத நிலையில் 70 சதவீத பஸ்களை இயக்கவில்லை. குறைவான பஸ்களே இயக்கப்பட்டது.

நேற்று முகூர்த்த நாளாக இருந்தது. முகூர்த்த நாட்களில் மாவட்டத்தில் ஓடும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதுபோன்று கல்லூரி, அலுவலகம் வேலை நாட்கள் என்பதால் காலை நேரங்களில் சற்று கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் வேலை நிறுத்த போராட்டத்தால் பஸ்கள் ஓடாது என கருதிய பொதுமக்கள் பஸ் ஏற வரவில்லை. கடலாடி, முதுகுளத்தூர், கமுதி போன்ற ஊரக பகுதிகளில் டவுன் பஸ்கள் முற்றிலும் ஓடாததால் கிராமமக்கள், மாணவர்கள் அவதிப்பட்டனர். மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரைக்கு வழித்தட பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட பொது மேலாளர் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் அனைத்து டிப்போக்களிலும் 45 சதவீதத்திற்கு குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. கூட்டம் சரியாக இல்லை’’ என்றார். நேற்று பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாததால், பயணிகள் கடும் அவதியடைந்தனர். கிடைக்கும் வாகனங்களில் செல்ல தொடங்கினர். தனியார் டூரிஸ்ட் பஸ்கள், மினி பஸ்கள் அனைத்தும் பல்வேறு வழித்தடங்களில் இயக்க அனுமதிக்கப்பட்டன. இதை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டது. டவுன் பஸ் இயங்கும் வழித்தடங்களில் ஷேர் ஆட்டோ, மினி வேன்கள் இயங்கின.

Tags : Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...