9,10,11ம் வகுப்புகளுக்கு ஆல்பாஸ் வேலை இழக்கும் ஆசிரியர்களுக்கு இழப்பீடு தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

பரமக்குடி,பிப்.26:  தமிழக முதல்வர் நேற்று 9,10,11ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அறிவித்தார். இதனால் வேலை இழந்து நிற்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ஜெயக்கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘தமிழக முதல்வர் நேற்று, சட்டமன்றத்தில், 9,10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல்பாஸ்  என அறிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பல பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதுவரையிலும் மிக குறைவான ஊதியத்தில் பணியாற்றி வந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள், இன்று வரை மாற்றுப்பணிகளை தேடி செல்லாமல் பல துயரங்களை அனுபவித்து வருகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில், தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பு மிகவும் வேதனையை உண்டாக்கியது.

மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளதால், ஆசிரியர்களையும் பள்ளிக்கு வரவேண்டாம் என கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால் பணி இழப்புடன் வாழ்வாதாரமின்றி உள்ளனர். கொரோனா காலக்கட்டம் முதல் இன்று வரையிலும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் முழுமையான சம்பளம் பெறாமல், குடும்பத்தில் உள்ள பொருள்களையும் நகைகளையும் விற்று குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது, முதல்வரின் அறிவிப்பு தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர் கொடுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, நடப்பு சட்டமன்ற தொடரிலேயே தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று நாள் வரையிலான காலத்தை கணக்கிட்டு இழப்பீடு அறிவிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>