11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு

மதுரை, பிப்.26: 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தானதை ஆசிரியர்கள் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் மிகவும் தாமதமாக திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் இன்னும் முழுமையாக நடத்தி முடிக்கப்படவில்லை. தமிழக அரசு மாணவர்களுக்கான பாடங்களை குறிப்பிட்ட சதவீதம் குறைத்துள்ளது. பொதுத்தேர்வு நடப்பதற்கு இன்னும் குறைந்த கால அவகாசமே உள்ளது. மேலும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலின் போது பாதுகாப்பு காரணங்கள் மற்றும் வாக்குச் சாவடிகளுக்காக பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்படும். தமிழக அரசு கடந்த 2018ம் ஆண்டு முதல் 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முறையை கொண்டு வந்தது. அதற்கு முன்பு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. நடப்பாண்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் சட்டசபையில் 9,10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது. இதனை ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர். மாணவ, மாணவியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறும்போது, ‘‘பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் பாடங்களை இன்னும் முழுமையாக நடத்தி முடிக்காமல் உள்ளனர். மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் உள்ள நிலையில் நடப்பாண்டில் 9,10 மற்றும் 11ம் வகுப்பு பொது தேர்வை அரசு ரத்து செய்திருப்பதை வரவேற்கிறோம்’’ என்றனர்.

Related Stories:

>