×

கொடைக்கானலில் கல்லறைக்கு இடம் கேட்டு மலைக்கிராம மக்கள் தர்ணா தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை

கொடைக்கானல், பிப். 26: கொடைக்கானல் அருகே கல்லறைக்கு இடம் கேட்டு மலைக்கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை மலைக்கிராமம் உள்ளது. இக்கிராமத்தை ஒட்டி உடைகள்பாறை, ஜேஜே நகர், கணேசபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 ஏக்கர் பரப்பளவில் கோம்பை சாலையில் கல்லறை பகுதிக்கு நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லறை பகுதியை தூய்மைப்படுத்துவதற்கு சென்ற மலைக்கிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தங்கள் மலைக்கிராம பகுதிக்கு கல்லறை வேண்டும் என்று நேற்று கோம்பை பகுதி மலைக்கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. முன்னதாக வருவாய் துறையினரிடம் இதுகுறித்து புகாரும் அளித்துள்ளனர். இருப்பினும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க தாமதம் ஏற்படுவதால் தர்ணா போராட்டம் செய்ததாக கிராம மக்கள் கூறினர். உடனடியாக கல்லறைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை கிராம மக்களுக்கு பெற்றுத்தராவிட்டால் சாலைமறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

Tags : Kodaikanal ,Tarna ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...