என்ன வழக்கு என்றே தெரியவில்லை ஓராண்டுக்கு மேலாக ஈரான் சிறையில் தவிக்கும் 9 குமரி மீனவர்கள்

நாகர்கோவில், பிப்.25: ஈரானில் சிறை வைக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தாமதம் ஆவதால் உறவினர்கள் வேதனையடைந்துள்ளனர். குமரி மாவட்டம் மிடாலத்தை சேர்ந்த ஆல்பர்ட் சேவியர், டயனஸ், ஆரோக்கியபுரத்தை சேர்ந்த காட்வின் ஜாண் வெல்டன், ஆரோக்கிய லிஜின், ஜோசப்பெஸ்கி, ஜேசுதாஸ், பள்ளத்தை சேர்ந்த சகாய விஜய், சின்னவிளையை சேர்ந்த மிக்கேல் அடிமை, கொட்டில்பாட்டை சேர்ந்த வெலிங்டன் என 9 மீனவர்கள் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி குவைத் நாட்டுக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றனர். அவர்களின் முதலாளி ஒலித் என்பவருக்கு சொந்தமான 3 படகுகளில் பாஹீல் என்னுமிடத்திலிருந்து இவர்கள் 9 பேரும் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 2020 ஜனவரி 17ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஈரான் படையினர் இவர்களை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். பின்னர் இவர்கள் அனைவரையும் ஈரானிலுள்ள புஷேர் சிறையில் அடைத்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இந்த மீனவர்களின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.  பொதுவாக கடல் எல்லை தாண்டியதாக குற்றம் சுமத்தப்படும் மீனவர்கள் காவல்நிலையத்தில் ஆஜராக்கப்படுவர். விசாரணைக்குப் பின்னர்  அதிகாரிகளின் கண்காணிப்பில் படகிலேயே தங்கவைக்கப்படுவர். நீதிமன்றம் அபராதம் விதிப்பின், அந்த அபராததொகை செலுத்தப்படும்வரை இவர்கள் சிறையிலடைக்கப்படுவர். ஆனால்  தற்போது இம்மீனவர்கள் மீது  எத்தகைய வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது, அபராதம் ஏதாவது விதிக்கப்பட்டுள்ளதா என்பது போன்ற விபரங்கள் ஏதுவும் இம்மீனவர்களின் உறவினர்களுக்கு  தெரிவிக்கப்படவில்லை. மேலும் அபராதம் விதிக்கப்பட்டிருப்பின், அந்த தொகையை இவர்களது முதலாளியை வைத்தே செலுத்த செய்து இம்மீனவர்களை உடனடியாக மீட்டு  தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.  ஜேசுதாஸ் என்ற மீனவரின் தாயார் மரிய பிரேமா நெஞ்சு வலியால் 2020 ஜூன் மாதம் இறந்து போனார். கடைசி நேரத்தில் தாயாரின் முகத்தை பார்க்க முடியாமலும், இறுதி அஞ்சலி செலுத்தமுடியாமலும் ஜேசுதாஸ் சிறையில் அவதிப்படுகிறார். இம்மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories:

>