×

பணகுடியில் கொள்ளையர் இருவர் கைது 55 பவுன் தங்க நகை மீட்பு

பணகுடி, பிப். 25:  நெல்லை மாவட்டத்தில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்த ரவுடி உள்பட இருவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 55 பவுன் நகையை மீட்டனர்.  பணகுடி பைபாஸ் சாலை  மின் அலுவலக பகுதியைச் சேர்ந்தவர் துரை (54). பெரியநாயகிபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி  சுகந்தி, வேப்பிலான்குளத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக  வேலை பார்த்து வருகிறார்.  இவர்கள் இருவரும் கடந்த  2020ம் ஆண்டு  பிப். 3ம் தேதி பணிக்கு சென்று வீடுதிரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 35 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். புகாரின் பேரில் பணகுடி இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். நேற்று மாலை  பணகுடி நகர எல்லை பகுதியில் திரிந்த இருவரை தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் சுற்றி வளைத்து பிடித்தனர்.  விசாரணையில் ஒருவர் பணகுடி  லெப்பை குடியிருப்பை சேர்ந்த பொன்னு என்பவர் மகன்  சேகர் (30), மற்றொருவர் நாங்குநேரி அடுத்த மூன்றடைப்பை சேர்ந்த  நம்பி மகன்  ரவி (35)  என்பதும், இருவரும் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் அம்பலமானது.

 கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் சென்னை புழல் சிறையில் இருந்த போது ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் நண்பர்களாகினர். இவர்களில் ரவி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில்  கைதாகி இருந்தநிலையில் பின்னர் வெளியே வந்ததும் இருவரும் சேர்ந்து கடந்த ஓராண்டாக  பூட்டிய வீடுகளை குறி வைத்து பணகுடி, நாங்குநேரி,  வள்ளியூர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசாரிடம் கூறினர். இதையடுத்து அவர்களிடம் இருந்து பல்வேறு இடங்களில் கொள்ளையடித்து 55 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிந்து இருவரையும் கைதுசெய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ