×

மாற்றுத்திறனாளிகள் விடிய, விடிய போராட்டம் கீதாஜீவன் எம்எல்ஏ நேரில் ஆதரவு

தூத்துக்குடி, பிப். 25: தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் 2வது கட்ட குடியேறும் போராட்டத்தினை விடிய விடிய நடத்திய மாற்றுத்திறனாளிகளை கீதாஜீவன் எம்எல்ஏ சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் 2வது கட்ட குடியேறும் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில், அங்கேயே தங்கியிருந்து சமையல் செய்து சாப்பிட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்றும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களை கீதாஜீவன் எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘தமிழக பட்ஜெட்டில் உங்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.  உங்களது கோரிக்கைகள் நியாயமான நிலையில், வரும் திமுக ஆட்சிக்காலத்தில் இதனை நிறைவேற்றுவதற்கான பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்’ என்றார். இதனிடையே தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள், பாளை ரோடு பெரியார் சிலை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 23 பெண்கள் உட்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.


Tags : Vidya ,Geetajeevan ,
× RELATED மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்