×

மேற்குவங்க மாநில சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்த ஒன்றிய அமைச்சர்கள் 19 மாநில பாஜ முதல்வர்கள் பிரசாரம்: பாஜக மீது மம்தா பானர்ஜி பாய்ச்சல்

 

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜகவின் ஒட்டுமொத்த அதிகார பலமும் எடுபடாது என முதல்வர் மம்தா பானர்ஜி காட்டமாக தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடந்த சில வாரங்களாக கடும் போட்டி நிலவுகிறது. இந்த சூழலில், ஹூக்ளி மாவட்டம் உத்தரப்பாராவில் நடந்த பிரம்மாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், ‘மேற்கு வங்கத்தில் எங்களது ஆட்சியை வீழ்த்த பாஜக தனது ஒட்டுமொத்த இயந்திரத்தையும் பயன்படுத்தியுள்ளது. பிரதமர் முதல் ஒன்றிய அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இங்கு முகாமிட்டுள்ளனர். இதுதவிர பாஜக ஆளும் 19 மாநிலங்களின் முதல்வர்களும் இங்கு தான் கிடக்கிறார்கள்.

அவர்கள் 50 ஹெலிகாப்டர்களில் பறந்து பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் எங்களிடம் வெறும் 3 ஹெலிகாப்டர்கள் மட்டுமே உள்ளன. இத்தனை ஆரவாரங்களும் வரும் மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும்போது அடங்கிவிடும். எங்கு பார்த்தாலும் ஒன்றியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. தேவைப்படாத இடங்களுக்கு கூட கவச வாகனங்களை கொண்டு வந்து அச்சுறுத்துகின்றனர். நான் போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் வெளியூர் நபர்களை பாஜகவினர் சட்டவிரோதமாக தங்க வைத்துள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு தீவிரவாத பாணியில் பேசுகிறார்.

அவரது பேச்சை காணொளி எடுத்து நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளோம். பிரதமர் மோடி ஹூக்ளி ஆற்றில் தின்பண்டம் சாப்பிட்டது கூட முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நாடகம். அவர் அதை வீட்டிலேயே தயாரித்து எடுத்து வந்துள்ளார். பாஜகவின் இத்தகைய திட்டம் மற்றும் போலித்தனமான பிரசாரங்கள் மக்களிடம் எடுபடாது. பாஜகவின் பணபலம் மற்றும் அதிகார பலத்திற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்’ என்று அவர் தெரிவித்தார். மேற்குவங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் 29ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Western state assembly elections ,Bahia ,Mamta Banerjee ,BJP ,Kolkata ,Chief Minister ,West Bengal Assembly ,West Bengal ,Trinamool Congress ,
× RELATED டெல்லியில் 110 டிகிரி வெயில் பதிவால் மஞ்சள் ‘அலர்ட்’