×

டெல்லியில் 110 டிகிரி வெயில் பதிவால் மஞ்சள் ‘அலர்ட்’

 

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக நேற்று 42.8 டிகிரி செல்சியஸ் (109.04 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நகரின் பல பகுதிகளில் 42 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவுவதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெயில் தாக்கம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு ‘வெப்ப அலை நீண்டகால திட்டம் 2026’-ஐ ஆய்வு செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மருத்துவமனைகளில் குளிர்ச்சியான அறைகள் மற்றும் கூடுதல் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்க தானியங்கி குடிநீர் இயந்திரங்கள் மற்றும் தண்ணீர் லாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளன. பள்ளிகளில் மாணவர்களுக்கு முறையான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதை நினைவூட்டும் ‘வாட்டர் பெல்’ முறை அமல்படுத்தப்பட உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மதிய நேரங்களில் வெளிப்புற வேலைகளைத் தவிர்க்கவும், தொழிலாளர்களுக்கு முறையான நிழற்குடை வசதிகள் மற்றும் உப்பு சர்க்கரை கரைசல் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட குளறுபடிகள் மீண்டும் நடக்காமல் இருக்க, பேரிடர் மேலாண்மை ஆணையம் வானிலை மையத்துடன் இணைந்து உடனுக்குடன் தகவல்களைப் பகிரத் திட்டமிட்டுள்ளது.

 

Tags : Delhi ,NEW DELHI ,India ,
× RELATED கோடை வெயில் தாக்கத்தால் பட்டாசு...