×

28ம் தேதி வரை மிதமான மழை பெய்யும்: தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்க வாய்ப்பு

 

சென்னை: வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் தற்போது இரு காற்று சுழற்சி உருவாக உள்ள நிலையில் படிப்படியாக வெப்பம் குறைந்து இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று ஆங்காங்கே மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இது 28ம் தேதி வரை நீடிக்கும். அதற்கு பிறகு கர்நாடகா, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மேலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மே மாதம் 1ம் தேதியும் சில இடங்களில் பெய்யும்.

இந்நிலையில், லட்சத்தீவு – மாலத்தீவு இடையே ஒரு காற்று சுழற்சி உருவாகி கேரள கடற்கரைக்கு நகர்ந்து வரும். அதன் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்யும். மே 5ம் தேதிக்கு பிறகு தமிழகத்தின் டெல்டாவிலும் தென் கடலோரத்திலும் உள் பகுதியிலும் தீவிரம் அடைந்து பெய்யும். 6,7, 8ம் தேதிகளில் வட கடலோரத்தில் மழை பெய்யும். விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்யும். அப்போது தென் மாவட்டங்களிலும் கோடை மழை தென்மேற்கு பருவமழை போல பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நீர்த் தேக்கங்கள் நிரம்பும் அளவுக்கு பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் 4ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம் வெப்பம் தெரியாத அளவுக்கு மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்குவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது. முன்னதாக வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் கடல் வெப்பம் மற்றும் நீரோட்டம் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக இரு கடல்களிலும் காற்று சுழற்சி விரைவில் உருவாகி மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்கிடையே பகலில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை 28ம் தேதி வரை பெய்யும்.

 

Tags : Chennai ,Bay of Bengal ,Arabian Sea ,
× RELATED வெளிநாட்டு நிதியுதவி சட்டதிருத்த...