×

பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை

புதுச்சேரி,  பிப். 24:  புதுச்சேரியில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரசார  பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி  சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்ததால்  நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.  இந்த பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி நாளை (25ம்தேதி) புதுச்சேரி  வருகிறார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக லாஸ்பேட்டை வருகிறார். அங்கிருந்து காரில் ஜிப்மர் வளாகத்தில் உள்ள அப்துல்கலாம் அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார்.ரூ.2426 கோடி செலவில் விழுப்புரம்- நாகை இடையேயான 4 வழிச்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ. 491 கோடி செலவில் காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனை கிளையை ஆகஸ்டு மாதத்துக்குள் முடித்து வைப்பதற்கான பணிகளை துவக்கி வைக்கிறார்.

சாகர் மாலா திட்டத்தின் கீழ்  ரூ.44 கோடி செலவில் புதுச்சேரி துறைமுக விரிவாக்கப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இப்பணிகளை ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. இதன்மூலம் சென்னை- புதுச்சேரி இடையே சிறிய ரக சரக்கு கப்பல் சேவை துவங்கும். அதேபோல்  இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ரூ. 7 கோடி செலவில் 400 மீட்டர் செயற்கை ஓடுதள பாதை அமைக்கும் திட்டத்தை துவக்கி வைக்க  இருக்கிறார். ஜிப்மர் மருத்துவமனையில் ரூ. 28 கோடி செலவில் அதி நவீன மற்றும் ஆராய்ச்சி வசதிகள், பயிற்சி மையத்தை உள்ளடக்கி ரத்த வங்கி அமைக்கும் பணிகளையும் துவக்கி வைக்கவுள்ளார். லாஸ்பேட்டையில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட மகளிர் விடுதியை திறந்து வைக்கவுள்ளார்.ரூ.14.83 கோடி செலவில் கடற்கரையில் பிரெஞ்சு காலத்தில் இருந்த மேரி கட்டிடம், அதே முறையில் புதுப்பிக்கப்பட்டதையும் பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். புதுச்சேரியிலும் சுய சார்பு இந்தியா திட்டத்தை துவக்கி வைக்க இருகிறார். ஜிப்மர் அரங்கத்தில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைக்க இருக்கிறார்.  

பின்னர் அங்கிருந்து மீண்டும் காரில் லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் 12  மணிக்கு நடைபெறும்  பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார். அவரது வருகையையொட்டி மைதானம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு  வரப்பட்டுள்ளது. அங்கு வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் அவ்வப்போது  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் வந்து செல்லும் வழித்தடங்களில்  சாலையோரம் தடுப்புக் கட்டைகள் கட்டப்பட்டு, சாலைகளை சீரமைக்கும் பணிகள்  முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கூடுதல் பாதுகாப்புக்கு துணை ராணுவம்  வரவழைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும்  பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் அதிமுக, பாஜ முக்கிய  நிர்வாகிகளை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. இதில் முதல்வர்  வேட்பாளர், தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகியவற்றுக்கு இறுதித் தீர்வு  எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Modi ,Pondicherry ,
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...