திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில், மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 10 மணியளவில் அலங்கரிக்கப் பட்ட தேரில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு மாடவீதிகளிலும் பக்தர்களுக்கு மோர், ரஸ்னா, தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம் போன்ற அன்னதானம் வழங்கப்பட்டது.

வழியெங்கும் பக்தர்கள் தேங்காய் உடைத்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றி முருகப்பெருமானை வழிபட்டனர். செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ், ஆர்டிஓ செல்வம், செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், மாமல்லபுரம் டிஎஸ்பி (பொறுப்பு) அருள்மணி, இன்ஸ்பெக்டர்கள் திருப்போரூர் கலைச்செல்வி, மாமல்லபுரம் வடிவேல் முருகன், திருக்கழுக்குன்றம் முனிசேகர், கேளம்பாக்கம் ராஜாங்கம், தாழம்பூர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் 300க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கவனிதா, கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் முருகன் ஆகியோர் செய்தனர். மதியம் 2 மணியளவில் தேர் நிலைக்கு வந்தடைந்தது.

Related Stories:

>