வழிப்பறியில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது: 2 பைக், செல்போன்கள், நகை பறிமுதல்

வாலாஜாபாத்: வழிப்பறியில் ஈடுபட்ட 6 வாலிபர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக், செல்போன்கள், நகை பறிமுதல் செய்தனர். வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் பிரவீன் (20). கடந்த 15ம் தேதி மாலை பிரவீன், அதே பகுதியில் சாலையை ஒட்டி நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 5 பேர், பிரவீனிடம் வழி கேட்பது போல நடித்து, வழிப்பறியில் ஈடுபட்டனர். சுதாரித்து கொண்ட அவர், அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் மர்மநபர்கள், அவரை சரமாரியாக வெட்டி, ஒன்றரை சவரன் செயின், செல்போன், ரூ.8000 ஆகிவற்றை பறித்து சென்றனர்.

புகாரின்படி வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், வாலாஜாபாத் அடுத்த உள்ளாவூர் காட்டு பகுதியில் சந்தேகப்படும் படி சிலர் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், நேற்று காலை அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சுற்றி திரிந்த 6 பேரை மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், வந்தவாசியை சேர்ந்த அசோக் குமார் (19) முருகன் (18) ரிஷிநாத் (19) சந்தோஷ்குமார் (20) கணேஷ் (21) சரவணன் (21) என தெரிந்தது.

மேலும் விசாரணையில், யாரும் இல்லாத சாலையில் செல்போனில் பேசுபவர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மது அருந்துபவர்களை நோட்டமிட்டு, அவர்களை தாக்கி பணம், செல்போன், நகை, பைக் ஆகியவற்றை கொள்ளையடிப்பார்கள். இவர்கள் மீது, திருவண்ணாமலை மாவட்ட சுற்று வட்டார காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவர்களிடமிருந்து 5 செல்போன்கள் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் 2 பைக்குகள், ஒன்றரை சவரன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>