வாஷிங்டன்: ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஈரானின் பொருளாதார வளர்ச்சியை முடக்கும் நோக்கில் ஒரு மிகப்பெரிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஈரானின் மிக முக்கியமான வருமான ஆதாரமான எண்ணெய் வர்த்தகத்தை குறிவைத்து, சீனாவில் உள்ள ‘ஹெங்லி பெட்ரோகெமிக்கல்’ என்ற பிரம்மாண்டமான சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஈரானிய எண்ணெய் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 40 கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தற்போது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் ஈரானின் நிதி ஆதாரங்களை நசுக்கவும், அதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், அதன் அணுசக்தித் திட்டங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்று அமெரிக்க நிதித்துறை நம்புகிறது.
இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த அமெரிக்க நிதித்துறை செயலாளர், அதிபர் டிரம்பின் நேரடி வழிகாட்டுதலின்படி, ஈரானின் “நிழல் கப்பல் படை” எனப்படும் ரகசிய எண்ணெய் விநியோக வலையமைப்பை சிதைக்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
