கூவம் கரையோரம் 4.53 லட்சம் மரங்கள் நடும் பணி தொடக்கம் செயல் திறன் அளவீட்டு முறையில் 48 வார்டுகளில் குப்பை சேகரிப்பு: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சியின் 48 வார்டுகளில் செயல் திறன் அளவீட்டு முறையில் குப்பை சேகரிக்கும் திட்டத்தை முதல் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியில், திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள 48 வார்டுகளில் தனியார் நிறுவனம் மூலம் செயல் திறன் அளவீட்டுமுறையில் குப்பை சேகரிக்கும் திட்டம் 8 ஆண்டு காலத்திற்கு ரூ.1,216 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தபடவுள்ளது. இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதைத்தவிர்த்து சேத்துப்பட்டு, பழைய மத்திய தார் கலவை வளாகத்தில் ரூ.9.33 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உயிரி எரிவாயு உற்பத்தி செய்யும் நிலையம், தண்டையார்பேட்டை மண்டலம், கொடுங்கையூரில் மறுசுழற்சி செய்ய இயலாத உலர் கழிவுகளை ரூ.9.49 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எரியூட்டும் எரிகலன், ரூ.9.33 கோடி மதிப்பீட்டில் தாவரக் கழிவுகள் மற்றும் தேங்காய் ஓட்டு கழிவுகளை  பதனிடும் நிலையம், உரம் தயாரிக்கும் நிலையம் உள்ளிட்ட திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.  

இதைத்தவிர்த்து சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் ரூ.36.61 கோடி மதிப்பீட்டில் கூவம் கரையோரம் 4.53 லட்சம் மரங்கள் நடும் திட்டத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார். மேலும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ரூ.142.30 கோடி மதிப்பீட்டில், வேலூர், திருப்பூர், நெல்லை, தஞ்சாவூர் மாநகராட்சியில் முடிவுற்ற பணிகள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் சார்பில் ரூ.325.08 கோடி மதிப்பீட்டில் முடிந்த பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.372.23 கோடி மதிப்பிலான பணிகள், பேரூராட்சிகள் இயக்ககத்தின் சார்பில் ரூ.9.75 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.906.42 கோடி மற்றும் பேரூராட்சிகள் இயக்ககத்தின் சார்பில்ரூ.24.71 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: