மன்னார்குடி அரசு மருத்துவமனையில் இன்டர்காம் வசதி துவக்கம்

மன்னார்குடி, பிப்.24: மன்னார்குடி அரசு மருத்துவமனையானது மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையாக கடந்த 2010ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் மருத்துவமனையில் பல்வேறு உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவமனையில் தற்போது 17 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இம்மருத்துவமனையில் நாள்தோறும் 3 ஆயிரம் உள் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களுக்கு விரைவாக சிகிச்சை அளிப்பதற்கான தகவல் பரிமாற்றத்தை மருத்துவர்களுக்கு செய்து கொள்வதற்கு வசதியாக தற்போது இன்டர்காம் வசதி நேற்று முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நிலைய மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜன், தலைமை செவிலியர் அமுதா, அன்புக்கரசி மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர்.

இது குறித்து மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் கூறுகையில், மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இன்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதன் மூலம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இடையே தகவல் பரிமாற்றம் உடனுக்குடன் நடைபெற்று பொதுமக்களுக்கு விரைவான சிகிச்சை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனையில் செயல்படும் 17 துறைகளை, 40 இன்டர்காம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் போன்ற பெரிய மருத்துவமனைகளில் செய்யப்படும். தற்போது இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Stories:

>