×

2வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி, ஒப்பாரி வைத்து அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருவாரூர், பிப்.24: திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக நேற்று அங்கன்வாடி ஊழியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி, ஒப்பாரி வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது பணி கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கம் சார்புடைய அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பிரேமா தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 246 பேர்களை தாலுகா போலீசார் கைது செய்து திருவாரூர் அருகே கூடூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்து பின்னர் விடுதலை செய்தனர்.

இருப்பினும் தங்கள் வீடுகளுக்கு செல்ல மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் பிரேமா உட்பட 30 பேர் தொடர்ந்து அந்த திருமண மண்டபத்திலேயே நேற்று காலை வரையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மீண்டும் 2வது நாளாக நேற்றும் கலெக்டர் அலுவலகம் முன்பாக வாயில் கருப்பு துணி கட்டி, ஒப்பாரி வைத்து காத்திருப்பு போராட்டமானது இரவு 9 மணி வரை தொடர்ந்து நீடித்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Tags : Anganwadi ,Thiruvarur ,Collector ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்