×

230 பேர் கைது உதவி தொகை உயர்த்தக் கோரி அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

தஞ்சை, பிப்.24: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் தஞ்சை, பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பில் அரசுத்துறையில் உள்ளது போல தனியார் துறையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம், சட்டமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தினமான நேற்று நடைபெற்றது.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சிவப்ரியா, மாவட்ட துணை தலைவர்கள் சங்கிலிமுத்து, ரவி, மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், கிறிஸ்டி, ராஜன் மற்றும் நிர்வாகிகள் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற குடியேறும் போராட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், அவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், 23 பெண்கள் உள்ளிட்ட 51 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கும்பகோணம்: கும்பகோணத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் குடியேறும் போராட்டத்திற்கு திட்டமிட்டிருந்தனர். அலுவலக வாயிலில், காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிகார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அடுப்பு, சமையல் பாத்திரங்கள், பாய் உள்ளிட்ட பொருட்களுடன், அலுவலக வாயிலில் முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் தீர்வு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். பாபநாசம்: பாபநாசத்தில் நடைபெற்ற பேராட்டத்தில் தலைவர் முத்துக்குமார், செயலர் மணிகண்டன் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED நலத்திட்ட உதவிகள் கிடைக்காவிட்டால்...