தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள் தொடங்கியது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்ட படிவம் 17C-யில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடன், மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விபரங்கள் ஒப்பீடு செய்து சரிபார்க்கப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். சரிபார்ப்பு பணி நிறைவடைந்த பிறகு தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் தொடர்பான புள்ளி விவரம் வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தேச வாக்குப்பதிவு தரவுகளின்படி சுமார் 85% வாக்குகள் பதிவாகியுள்ளன. சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குச் சதவிகிதத்திலே இதுவே அதிகம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக 85 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 78 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தன.
2021 தேர்தலை விட 2026 தேர்தலில் சென்னையில் 9 தொகுதிகளில் வாக்களித்தோர் எண்ணிக்கை குறைந்த தகவல் அம்பலமாகியுள்ளது. வாக்கு சதவீதம் அதிகரித்ததாக தெரிந்தாலும் 44 ஆயிரம் பேர் வரை குறைவாக வாக்களித்தது புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் மொத்தம் 28,93,505 வாக்காளர்கள் உள்ளனர். அவா்களில் ஆண்கள் 13,95,716 பேர். பெண்கள் 14,96,921 பேர். இதர வாக்காளா்கள் 868 போ் உள்ளனர். இதற்காக 975 இடங்களில் 4,085 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டசபை தொகுதிகளில் 419 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில் 298 பேர் சுயேச்சைகள். சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 83.73 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆனாலும், சதவீதம் அதிகரித்து காணப்பட்டாலும், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்குப் பதிவு வெகுவாக குறைந்துள்ள தகவல் அம்பலமாகியுள்ளது. சதவீத அடிப்படையில் அதிகமாக வாக்களித்தது போன்ற ஒரு பிம்பம் தெரிந்தாலும், வாக்காளர்கள் எண்ணிக்கை என்பது வெகுவாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள் தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். சரிபார்ப்பு பணி நிறைவடைந்த பிறகு தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் தொடர்பான புள்ளி விவரம் வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர்.
