×

சில்லக்குடியில் 28ம் தேதி ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள்

பெரம்பலூர், பிப் 24: ஆலத்தூர் தாலுகா சில்லக்குடியில் வரும் 28-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தில்மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுப்பணிகளை கலெக்டர் வெங்கட பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சில்லக்குடி கிராமத்தில் வரும் 28-ம் தேதி அன்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை கலெக்டர் வெங்கட பிரியா மற்றும் எஸ்பி நிஷா பார்த்திபன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காளைகள் நிறுத்தப்படும் இடத்தில் மழை, வெயில் பாதிக்காமல் இருக்க கூடாரம் அமைத்திடவும், காளை ஓடும் பகுதியின் இரண்டு புறங்களிலும் பார்வையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் உறுதியான இரும்பு சட்டங்கள் மற்றும் மரக்கட்டைகள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்திடவும், காளைகள் கடைசியாக வந்தடையும் இடத்தில் அவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்க தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள வரும் காளைகள் மற்றும் வீரர்

களுக்கு அனைத்து வசதியுடனும் கூடிய மருத்துவ பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டு உரிய மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும். நிகழ்ச்சியின்போது பொதுமக்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் உதவும் வகையில் குறைந்தபட்சம் 150 தன்னார்வலர்களை தேர்வு செய்து, அவர்களுக்கென தனி சீருடை வழங்க வேண்டும். மாடுபிடி வீரர்களுக்கும் விழாக்குழுவினருக்கும் தனித்தனி நிறங்களில் சீருடை வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு விழாவானது காலை 8மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருப்பதால் விழாவில் கலந்து கொள்ளும் மாடு பிடி வீரர்களை நான்கு பிரிவுகளாக பிரித்து எந்தவித பாகுபாடின்றியும் அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவு மாடுபிடி வீரர்களுக்கும் தனித்தனி சீருடைகளை வழங்கி விழாவின்போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் நடத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காளையை அடக்குவோர் 15 மீ. தூரத்திற்கு திமிலை மட்டுமே பிடித்துக்கொண்டு செல்லவேண்டும். வால் மற்றும் காது போன்றவற்றைப் பிடிக்கக்கூடாது அவ்வாறு செய்யும் வீரர்களை விழாக்குழுவினர் உடனடியாக காவல்துறையினரின் உதவியோடு வெளியேற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். போட்டி நடைபெறும் இடத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் பட்சத்தில், உடனடி சிகிச்சை அளிக்கும் பொருட்டும் மருத்துவர்களும், அவசர ஊர்திகளும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும், அனைவருக்கும் தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் வெங்கட பிரியா அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர், டிஎஸ்பி மோகன்தாஸ், ஆலத்தூர் தாசில்தார் அருளானந்தம் மற்றும் விழாக்குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Jallikattu ,Chilakkudi ,
× RELATED ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு