4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து மறியல் 202 சத்துணவு ஊழியர்கள் கைது

நாகை, பிப்.24: ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே கருப்பு பேட்ஜ் அணிந்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராஜூ ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், வட்ட செயலாளர் தமிழ்வாணன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினர். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். அமைப்பாளர்களுக்கு ரூ. 5 லட்சம், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ. 3 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இதேகோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 16 ஆண்கள் உட்பட 202 பேரை கைது செய்து நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Related Stories:

>