பழைய பாளையம் கிராமத்தில் நிவாரணம் கோரி விவசாயிகள் சாலை மறியல்

கொள்ளிடம், பிப்.24: கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் நிவாரணம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழைய பாளையம் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 500 விவசாயிகள் நிவாரணம் கோரி விஏஓ மூலம் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் அறிவித்தது. ஒரு ஏக்கருக்கு ரூ 8,000 வீதமும் நிவாரணம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ரூ.2000 தருவதாகவும் அறிவித்தது. ஆனால் அரசு அறிவித்த நிவாரண தொகை விவசாயிகளுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இதுகுறித்து விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே நிவாரணம் வழங்காத அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக நிவாரணம் வழங்க வற்புறுத்தியும் புத்தூரிலிருந்து புதுப்பட்டினம் செல்லும் நெடுஞ்சாலையில் பழையபாளையதில் காவிரி பாசன பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் விசுவநாதன் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் சிவக்குமார், ஜெயராமன், கிருஷ்ணமூர்த்தி, சந்தானம், கோபி, தனசேகரன், வரதராஜன், சிலம்பரசன்,புது மண்ணியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் கோதண்டராமன் மற்றும் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையின் குறுக்கே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி தாசில்தார் அரிதரன், கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன்,வட்டார வேளாண் அலுவலர் விவேக், புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வரும் 27ம் தேதிக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதுகுறித்து காவிரி பாதுகாப்பு பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விசுவநாதன் கூறுகையில், வரும் 27ம் தேதிக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க தவறினால், அனைத்து விவசாயிகளையும் திரட்டி கொள்ளிடத்தில் பெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் நிவாரணம் வழங்க தவறினால் வாக்காளர்கள் அனைவரும் அவர்களுடைய வாக்காளர் அட்டைகளை சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்தனர். இந்த சாலை மறியலால் புத்தூரில் இருந்து புதுப்பட்டினம் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Related Stories:

>