×

நடிகரை நேசிக்கும் ஒரு கூட்டம்… நாட்டை நேசிப்பவர்கள் இன்னொரு பக்கம்… திரை கவர்ச்சி மங்கும் இன எழுச்சி பொங்கும்: அடித்து சொல்லும் சீமான்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள கம்பன் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியை நேற்று காலை பார்வையிட வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது: 5 ஆண்டு காலம் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய தலைவனை தேர்வு செய்யக் கூடிய வாய்ப்பு ஜனநாயகத்தில் உள்ளது. அதனை சரியாக பயன்படுத்த வேண்டும். பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் வாக்களித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டை நேசிக்கும் ஒரு கூட்டம், நடிகரை நேசிக்கும் ஒரு கூட்டம் உள்ளது.

இதில் நாட்டை நேசிப்பவர்கள் எந்த பக்கம் இருக்க போகின்றனர்? நடிகரை நேசிப்பவர்கள் எந்த பக்கம் நிற்க போகிறார்கள் என்பது இனிமேல்தான் தெரியும். நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் வந்தால் இதைவிட கூட்டம் வரும். பீகாரில் புஷ்பா பாட்டு வெளியிட போன நடிகருக்கு 15 லட்சம் பேர் கூடினார்கள், பீகாருக்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லை. அங்கு அவர் தேர்தலிலா நிற்க போகிறார்? திரையில் பார்த்த நடிகரை நேரடியாக பார்க்கும்போது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும். கூட்டம் கூடத்தான் செய்யும்.

சேலத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் 400 பேர் அமர்ந்து இருந்தனர், ஆனால் நகைக்கடையை திறக்க நடிகை நயன்தாரா வந்ததற்கு 40 ஆயிரம் பேர் கூடினார்கள். கூட்டம் அரசியல் அல்ல. கொள்கை தான் அரசியல். கூட்டம் கலையும். கொள்கை அப்படியே நிற்கும். திரைப்பட கவர்ச்சி இன்று இருக்கும். அந்த நடிகரை 10 முறை பார்த்தால் அதே மூஞ்சி தான் என போய் விடுவார்கள். திரை கவர்ச்சி மங்கும். இன எழுச்சி பொங்கும். குளம் வற்றும், குட்டை வற்றும், கடல் வற்றாது. இவ்வாறு கூறினார்.

* பிரசாரத்தில் கடும் சாடல் நேரே கண்டதும் தழுவல்
வாக்குச்சாவடியை சீமான் பார்வையிட்டு வெளியே வந்த போது தவெக வேட்பாளர் பிரபு வாக்குச்சாவடியை பார்வையிட உள்ளே வந்தார். இருவரும் எதிரெதிரே சந்தித்து ஆரத்தழுவி கொண்டனர். தேர்தல் களத்தில் ஒருவரை, ஒருவர் கடுமையாக சாடியவர்கள் நேரடியாக பார்த்தபோது கட்டித்தழுவி கொண்டது தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

மேலும், சாட்டை துரைமுருகன், தவெக வேட்பாளர் பிரபுவின் தந்தை குறித்தும், அக்கட்சியில் தற்போது இணைந்தவர்கள் குறித்தும் கடுமையாக சாடி வீடியோ பதிவு செய்து வெளியிட்டார். இது ைவரலாக பரவியது. இந்த நிலையில் கட்டி தழுவி கொண்டதை பார்த்த மக்கள், ‘‘அப்ப தேர்தலில் வசை பாடியது எல்லாம் நடிப்பா கோபால்’’ என கமெண்ட் அடித்தபடி சென்றனர்.

Tags : Seeman ,Karaikudi ,Naam Tamil Party ,Kamban School ,Karaikudi, Sivaganga district ,
× RELATED முன்னேற்பாடு நடவடிக்கைகளில் கடும்...